Monday, November 4, 2013

நாத தனுமனிசம்

அச்சிப் பாட்டி என்று நான் கேள்விபட்டிருந்த என் அப்பாவின் அம்மா நல்ல சங்கீத ரசனை உள்ளவர். தாத்தாவுக்கு?  ஊஹூம். திருவிளையாடல் சினிமாவில் ஹேமாநாதபாகவதர் பாலையா சொல்வது போல யாரும் வாயைத்திறந்து பாடக்கூடாது. இந்த நெருக்கடிகடிகளுக்கிடையில் சமையறையிலும் பின்கட்டிலும் அம்மாவிடம் கற்ற மகள்களான என் அத்தைகள் அனைவருமே பாடுவதில் சமர்த்தர்கள்.

நான் சிறுவனாக இருந்தபோதும் பிறகும் கூட எங்கள் தெருவிலுள்ள வீடுகளுக்கு எப்போதாவது ஒரு பெரியவர் வருவார். நரைதாடி மீசை லேசான வழுக்கை. இடுப்பில் நாலுமுழவேட்டி. மடித்துக்கட்டிய துண்டு. நெற்றியில் விபூதிக்கிற்றுகள். கையில் கஞ்சிரா. நல்ல கணீர் குரல். கர்நாடக சங்கீதப் பாடல்களை பாடுவார். அரிசியோ பணமோ பெற்றுக்கொண்டு போவார். மறுபடி எப்போது வருவார் என்று தெரியாது. அடுத்தவருடம் திடீரென தோன்றுவார். எங்கள் வீட்டில் அவரை பாடச்சொல்லி கேட்பார்கள். சித்தரஞ்சனியில் அவருடைய நாத தனுமனிசம் தவறாமல் உண்டு. அது பாட்டி மிகவிரும்பி கேட்கும் பாடலாம். பக்கத்துவீட்டில் அவரை பாடச்சொல்லிக் கேட்டு சத்தமில்லாமல் நன்றியோடு கொஞ்சம் அரிசி கொடுத்தனுப்புவாராம்.
இதை கேட்கையில் அந்த பெரியரின் நினைவு வருகிறது பாட்டியின் நினைவோடு.
https://www.youtube.com/watch?v=D9DqU_yFI8w

Wednesday, August 14, 2013

பாலக்கொல்லை தபால் ஆபீஸ்

முன்பெல்லாம் கிராமங்களுக்கு தபால் ஆபீஸ் என்பது மூச்சு. கடிதங்கள் தந்தி போன்றவை தொடர்பு சாதனங்கள். சிறு கிராமங்களில் தபால் ஆபீஸ் கிடையாது . ஆகவே நம்பிக்கைக்கு உரிய யாராவது ஒருவருக்கு லைசென்ஸ் ஸ்டாம்ப் தந்து கார்டு கவர்கள்  விற்பனை செய்வார்கள். அதில் லாபம் எதுவும் கிடையாது. ஒரு கௌரவ நிமித்தம். அவ்வளவே.

அப்படி பாலக்கொல்லை என்ற சிறு கிராமத்தில் தன் வீட்டின் ஒரு பகுதியிலேயே தபால் ஆபீசை அமைத்து நீண்ட நாட்களாக சேவை செய்து வந்தார் பெரியப்பா வேங்கடக்ரிஷ்ணன். அவர் துவக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தார். ஆனால் அவர் தபால் ஆபீஸ் காரராகவே அறியப்பட்டார். பிறகு அங்கிருந்து தபால்களை ஆறு மைல் தாண்டி இருக்கும் நகரத்திற்கு கொண்டுபோக EDD என்ற Extra Deartmental Duty நபர் ஒருவர் பகுதி நேர ஊழியராக நியமிக்கப் பட்டு தபால் போக்குவரத்து உண்டானது.

இன்று உள்ள அந்த கிராமத்தவர்கள் அவருடைய சேவைக்கு கடன் பட்டவர்கள்.

பத்திரம் எழுதுதல்

தற்போது drafting என்பது ஒரு கலையாக கற்பிக்கப் படுகிறது. ஆனால் அந்த காலத்தில் அது மிக சாதாரணமான விஷயம். ஒவ்வொன்றுக்கும் ஒரு எழுதுமுறை உண்டு . அதில் மிக சிக்கலானதும் சட்டரீதியான விஷயம் உடையதும் - பத்திரம் எழுதுதல். வீடு அடமானம் கொடுக்கல் வாங்கல் போக்கியம் வைத்தல் கடன் பத்திரங்கள் என்று பல வகை. பாண்டுபத்திரம்  என்று அழைக்கப்பட்டு ப்ரோநோட் வாங்கி அதில் எழுதப்படும்.  இதற்கு சம்மந்தப் பட்டவர்கள் இரு குழுவாக வந்து பத்திரம் எழுத சொல்லுவார்கள். எல்லா விவரமும் சேகரித்து - விஷயத்திற்கு தக்க முறையில் எழுதுவார்கள். ஊரிலியே இதை எழுத தெரிந்தவர்கள் ராமமூர்த்தி பெரியப்பாவும் என் அப்பாவும் தான். இதில் பல நெளிவு சுளிவுகள் உண்டு. அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவது. இரு வரிகளுக்கான இடைவெளியில் வேறேதும் எழுத முடியாத படி நெருக்கியும் ஆனால் வரிகள் overlap ஆகாமலும் இருக்கவேண்டும். பக்கத்தின் கடைசி விளிம்பு வரை எழுதி வார்த்தைகளை ஒடித்து எழுத வேண்டும். ஏதாவது சிறு திருத்தம் நேர்ந்தால் அடித்து எழுதி ஒரு இனிஷியல் போடுவார்கள். அந்த திருத்தம் பற்றி அடிக்குறிப்பு எழுதுவார்கள். இறுதியில் சம்மந்தப் பட்டவர்களின் கையெழுத்து அல்லது ரேகை பதிவு செய்து - இவர்கள் நெட்டெழுத்து போடுவார்கள். இது எந்த நீதி மன்றம் போனாலும் செல்லத் தக்கதாய் இருக்கும்.




Sunday, August 12, 2012

நல்லது செய்தல் என்பது என்ன?

ஒருமுறை என் அப்பா இரவில் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்துவந்துகொண்டிருந்தார். போதும் போததுமான வெளிச்சம். வழியில் ஒரு சிறிய பொட்டலம் கீழே கிடப்பதைக் கண்டு எடுத்து தெருவிளக்கு வெளிச்சத்தில் பார்த்தார். ஒரு ரோஸ்நிற பொட்டலத்தில் இரண்டு தங்க மூக்குத்திகள். நாய்கள் தூங்கும் இரவு வீதி. அந்த பொட்டலம் கிடந்த இடத்திற்கு கொஞ்ச தூரத்தில் பொற்கொல்லர் வீடு. (பத்தர் என்று சொல்வதுண்டு). அவர் வீட்டின் கதைவைத் தட்டினார். இந்த நேரத்தில் என்ன என்று வந்த பத்தரிடம் இந்த பொட்டலம் கிடந்தது. அநேகமாக உங்களிடம் கடைசியாக வந்தரவர்களில் யாரோ  ஒருவர் தான் இதை தவறிவிட்டிருக்க வேண்டும்.  நான் அக்கம் பக்கம் யாரையாவது விசாரித்தால் அவர்கள் தங்களுடையது என்று சொல்லக் கூடும். அப்படி சொன்னாலும் அதை ஊர்ஜிதம் செய்வது கடினம். ஆனால தவறவிட்ட ஆள் நிச்சயமா உங்களை தேடி வரக்கூடும். தகுந்தபடி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

மறுநாள் அப்பா கடைவீதியில் இருக்கும்போது நகையை தவறவிட்ட நபர் அப்பாவின் பெயர் அவர் எங்கிருப்பார் என்று தெரிந்துகொண்டு வந்து அப்பாவை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னாராம். கிராமத்து ஆள். கல்யாணத்திற்காக வாங்கிக்கொண்டு போன மூக்குத்திகள். உங்கள மாதிரி நல்லவர்கள் இருப்பது எனக்கு வரவிருந்த கஷ்டம் விலகியது என்பதா சொன்ன போது அப்பா சொன்னாராம்.  “நான் என்ன பெரிதாக செய்துவிட்டேன்?  நீ கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து நல்ல காரியத்திற்காக வாங்கிய பொருள்.அது உன் உழைப்பின் சொத்து. அது  யார் கையில் கிடைத்திருந்தாலும் உன்னை வந்து சேர்ந்திருக்கும். அது மறுபடி உன் கைக்கு வந்து சேர்ந்தது உன் நல்ல எண்ணத்தாலும் ஒழுக்கத்தாலும் இருந்திருக்குமே தவிர என்ன நல்ல எண்ணத்தால் அல்லஎன்றாராம்.  அந்த வார்த்தைகள் என் மனதில் பதிந்து நான் எப்போதும் ஒருவருக்கு உதவி செய்ய நேர்ந்தால் அது என்னுடைய நல்ல தனத்தால் அல்ல. அவர்களுடைய நல்ல தனத்திற்கான உரியது. அவருக்கு நிகழ வேண்டிய உதவி என் மூலமாக நடந்திருக்கிறது என்றே தீவிரமாக நம்புகிறேன். கடைபிடிக்கிறேன். இந்த எண்ணம் என் வாழ்வின் எதிர்காலத்திலும் மாறாமல் இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.





Saturday, July 14, 2012

அந்த காலத்தில் கிராமங்களில் நெல் மூட்டையை அருகில் உள்ள நகரத்து அரவை மில்லுக்கு கொண்டு சென்று - அரிசி நொய்  தவிடு என்று கொண்டு வருவது வழக்கம். அப்படி கொண்டு போக. என் தாத்தா மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றிவிட்டு . மிஷினுக்கு போ என்று வண்டி மாடுகளிடம் சொல்வாராம் . அவை இரண்டு மைல் தூரத்தில்   உள்ள மிஷினுக்கு தானாகவே - ஓட்டும் ஆள் இல்லாமல் - போகுமாம். பின்னால் சைக்கிளில் தாத்தா செல்வாராம். அப்படிப்பட்ட பழகிய மாடுகள் இருந்தன அப்போது .

Friday, June 8, 2012

சிவலோக நாதனைக் கண்டு

சின்ன தாத்தா சுப்பராமய்யரின் மனைவி விசாலாக்ஷி அம்மாள். சுப்பராமய்யர் கண்டிப்பும் கம்பீரமும் கலந்த ஆளுமை மிக்கவர். அவர் மீசையை மேலே முறுக்கியபடி வைத்திருப்பார். அதனால் மீசைக்காரர் என்றே  அழைக்கப்பட்டார். ரௌத்ரமும்  நேர்மையும் மிக்கவர். பயமற்றவர். அவருடைய மனைவி ஏதோ நோய்வாய்ப் பட்டார். அந்த காலம். என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நடுத்தர வயது. உடல் பலகீனமாகி பாட்டி நலிந்திருந்தார். அப்போது தனக்கு ஏதோ பயமாக இருப்பதாகவும் கண் முன் இருள் மண்டி வருவதாகவும் சொல்லி பயந்தாராம். தாத்தா ஏன்  பயப்படுகிறாய்? தைரியமாய் இரு. கடவுளை நினை என்றாராம். (அப்போதும் ஆணைகள்தான் !). ஏதாவது பாடு என்றாராம். பாட்டி "சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர் "என்ற பாடலை குரல் நடுங்க பாடினாராம். கண்ணீர் வழிய. இருளின் அச்சத்தைப் போக்கி அந்த பாடல் அவருக்கு உள் ஒளி தந்திருக்க வேண்டும். " பாடு/.. பாடு பாடிக்கொண்டே இரு" என்றாராம். தைரியம் கொள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம். நலிந்த குரலின் மெலிந்த சுரத்தில் பாட்டியின் பாடல் ஏதோ ஒரு கணத்தில் தேங்கி நின்றபோனது. அணைந்த அகல் விளக்கின் நெளியும் புகைபோல அந்த குரல் சற்றுநேரம் அந்த வெளியில் தேங்கி மறைந்தது.  பிறகு அங்கிருந்தவை கரைந்த கண்களும் உறைந்த முகமும்.

 அவர் கண்டிப்பாக சிவலோக நாதனைக் கண்டிருக்க வேண்டும்.

http://www.youtube.com/watch?v=e6l-9OaHyso
இந்த இணைப்பில் அந்த பாடலைக் கேளுங்கள். பாருங்கள். நந்தியின் கொம்பு இடையே சிவன். பிறகு நீல வானம். விசாலாட்சி பாட்டியின் பாட்டுக்கு ஏற்றபடி அமைந்திருக்கு இந்த ஒளிக்காட்சி கூட.  பாட்டியின் புகைப்படம் இல்லை. நான் பார்த்தது இல்லை. ஆனால் இந்த பாடலில் அவர் தெரிகிறார்.






அதிர்ச்சி வைத்தியம்

சுமார் அறுபது ஆண்டுக்கு முன் இருக்கலாம். மீசைக்கார தாத்தா என்றழைக்கப்படும் சின்ன தாத்தா வீட்டுக்குள் நுழையும்போது அத்தை (அவர் தங்கை ) பதட்டத்துடன் கண்ணீருடன் இருந்தவர் இவர் வருவதைக் கண்டவுடன் சட்டென்று கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டாராம் . (அவர் பேரை சொன்னாலே வீடே நிசப்தம் ஆகிவிடும். அப்படி ஒரு பயம் அனைவருக்கும்.) இதை கவனித்த தாத்தா என்னவென்று விசாரித்தாராம். விஷயம் ஒன்றுமில்லை. அத்தையின் மூத்த மகன் - சிறுவன் ஏதோ அடம் பிடித்து கேட்டதை தரவில்லை என்பதற்காக மொட்டை மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று மாடி மேல் போய்  நின்று கொண்டிருந்தானாம். தாத்தா கீழே இருந்து பார்த்தார். பையன் மேலே நிற்கிறான். கீழே இடப்புறம் பெரிய வைக்கோல் போர் இருக்கிறது. உடனே தாத்தா மளமளவென்று அருகிலிருந்த முள் செடியின் கிளைகளை வெட்டி வைக்கோலின் மேல் போட்டுவிட்டு "இப்போது குதி. குதிக்காவிட்டால் நான் வந்து தள்ளி விடுவேன்" என்றாராம். பையன் பத்திரமாக கீழே இறங்கி வந்தானாம்.