Sunday, January 1, 2012

தாத்தா - குரு

பெரிய தாத்தா லௌகீகமானவர் . அது கடைந்த கடைசலில் நிறைய உழன்றிருக்கிறார். ஆனாலும் அவருக்குள்ளே ஆத்மீக ரசம் ஒன்று கிணற்றில் ஊரும் மௌனமான ஊற்று போல கசிந்து கொண்டே இருந்திருக்கிறது. அதை அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு அப்போது அவர் உடன் யாரும் இல்லாமல் போனதும், தான் உணர்ந்த ஆன்ம விசாரணை விஷயத்தை பிறருக்கு அவர் சொல்லாமல் அல்லது சொல்ல முடியாமல் போனதும்தான் அவருடைய இன்னொரு பக்கத்தை  யாரும் அறிய முடியாமலே போயிருக்கிறது என்று என் எண்ணம். இந்த எண்ணம் எப்படி எனக்கு தோன்றுகிறது என்றால் சத்யம் அக்கா தன்னுடைய தற்போதைய சத் விஷயத்துக்கு அவரே மூலமாய் இருந்திருக்கிறார் என்று தற்போது உணர்வதே காரணம்.

அவளுக்கு எட்டு வயதே  இருக்கும்போது கோவிலுக்கு அவரோடு செல்வதும் இருட்டு என்பதால் அவர் விரலைப் பிடித்தபடியே அவர் தட்சிணாமூர்த்தி சிலை யருகே நின்று த்யாநிக்கும்போது கூடவே இருந்ததும் - அந்த சாரலும் சாரமும் தான் இன்று அவளிடம் வித்து விட்டிருக்கிறது என்று உணர்கிறாள். அப்போதே தாத்தா சொல்லுவாராம். "கடவுளிடம் அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் வேண்டிக்கொள்ள வேண்டாம்.  எது நம் நன்மைக்கு  என்பதெல்லாம் அவருக்கு தெரியும். நாம் வேண்டும் விஷயங்கள் நமக்கு தீங்காக கூட அமையலாம். ஆகவே அவரிடம் டிமாண்டு செய்ய வேண்டியதில்லை என்று " இந்த ஞானத்தெளிவை அவர் சிறுமியான சத்யாவிடம் சொல்லி இருக்கிறார்.ஆகவேதான் இப்போது அவள் அவரை தாத்தா மூலம் கொண்ட தன் முதல் குரு என்று உணர்கிறாள். இன்னும் அவரிடம் என்னென்ன பொக்கிஷங்கள் இருந்து நமக்கு தெரியாமலே போனதுவோ என்று தோன்றுகிறது இப்போது.




Wednesday, April 13, 2011

கனவு

கனவை சுமந்த
கனவொன்றை
கனவு கண்டிருக்கையில்

ஒன்றின் விழிப்பில்
உதிர்ந்து போனது
மற்றெல்லாம்

எது எதைக் கலைத்தது
என வியந்து       

Monday, January 25, 2010

ஊமை ஜோசியன்

ஊமை ஜோசியன். இவரிடம் பாலகொல்லை பெரியப்பாவுக்கும் மிகுந்த நம்பிக்கை உண்டு. அவ்வப்போது அவன் வந்து இவரிடம் ஏதாவது பேசுவது (!) உண்டு. அவன் ஜாதகமா கைரேகையா என்னவோ நினைவில் இல்லை. அவருக்கு ஆரூடம் சொல்லுவான். அடிக்கடி ஊமை ஜோசியன் சொன்னான் என்று சொல்வார். பெரும்பாலும் அவை நடந்திருக்கின்றன என்று சொல்வார்கள். சில சமயம் இதை செய் இதை செய்யாதே என்றும் சொல்வானாம். குடும்ப ரீதியில் அவனை ஒரு ஆரூட காம்பஸ் என்று சொல்லலாம். அவன் சொல்வது அவருக்குதான் புரியும். பெரியம்மாவுக்கு கூட புரியும்.

ராமமூர்த்தி அய்யர் - தேள் கடி சிகிச்சை

ராமமூர்த்தி அய்யர் எனக்கு பெரியப்பா - என் அப்பாவுக்கு அண்ணன் உறவு - அவர் பள்ளிக்கூட வாத்தியார். முன்பு மணியக்காரராக இருந்தார். அதனால் அவரை மணியகார் பெரியப்பா என்போம். நல்ல உயரம். சிறிது நாள் தாடி வைத்திருந்தார். நிலபுலங்கள் உண்டு. நிறைய மாடுகள் உண்டு. வீட்டின் முன் ஒரு பண்ணை அளவுக்கு மாடுகள் இருக்கும். விவசாய மனம் உடையவர். அவர் வீட்டில் ஒரு கண்ணாடி பாட்டிலில் பொட்டசியம் பெர்மங்கனட் இருக்கும். இன்னொரு பாட்டிலில் சர்க்கரை இருக்கும். இதுதான் தேள் கடி மருந்து. ஊரில் யாருக்கு தேள் கொட்டினாலும் உடனே அங்கு ஓடி வருவார்கள். தேள் கடி பாட இடம் - கடி வாய் - லேசாக வேர்த்து இருக்குமாம். பெரும்பாலும் இவை இருட்டு வலையில்தான் நடக்கும் . "தேள்தானா பாத்தியா" என்று கேட்டுவிட்டு சிகிச்சை செய்வார். சிறு துளி கரு நிற பொட்டாசியம் பர்மந்கனட் வைத்து அதன் மேல் சிட்டிகை சர்க்கரை வைத்து ஒரு சொட்டு நீர் விட்டு சிறு துடைப்ப குச்சியால் லேசாக அந்த பொடிகளை நகர்த்துவார். கடிவாய் இடம் கண்டவுடன் அது சுறு சுறு சுறுவென பொங்கும். அப்போது கடிபட்டவர் அலறுவார். "அவ்ளோதான் சரியாய் போச்சு போ" என்று சொல்லி அனுப்பிவிடுவார். இந்த சிகிச்சையை வேடிக்கை பார்க்க எப்போதும் ஒரு சிறுவர் கூட்டம் இருக்கும். 

சுப்பராமய்யர் டைரி

இதை முன்பே பதிவு செய்தேனோ என்னவோ தெரியவில்லை. செய்திருந்தால் இது கூறியது கூறல் வகைப் பிழையாக கொள்வீராக. 


மீசைக்கார தாத்தா எனப்படும் சுப்பராமய்யர் கம்பீரமும் நேர்மையும் கோபமும் கலந்த ஆகிருதி. 1965 JUNE. அவர் தனக்கு வயிறு ஏதோ அசொவ்கரியபடுத்துகிறது என்று தன மகனை - மாலி சித்தப்பா - வரச்சொன்னார். எனக்கு என்னமோ சரியில்லை. வில் வண்டிக்கு சொல்லிவிடு. நாளை என்னை சென்னைக்கு அழைத்துப்போ என்றார். ஏற்பாடுகள் ஆயின. திடீரென்று இரவு சென்னை வேண்டாம் உடனே கடலூருக்கு ஆஸ்பிடலுக்கு அழைத்துப்போ என்று சொன்னார். சரி என்று அழைத்துசென்றனர். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில். அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய் படுத்திருப்பது என்பது காற்றாடாத ஆலமரம் போல. பெரிய தாத்தா தன் தம்பியின் ஆரோக்கியம் குறித்து  கவலை கொண்டார். ஆனால் பயப்படவில்லை. அந்த சமயத்தில் என் எம்மா என்னை வயிற்றில் சுமந்திருந்தார். பேறு காலம். நான் பிறந்தேன் என்ற செய்தி அவருக்கு கிடைத்து சந்தோஷப் பட்டாராம். நீண்ட எதிர் பார்ப்புக்குப் பின் பிறந்த ஆண் மகவு நான் என்பதால். அவரை பார்க்க வந்தவர்களை என்னை (குழந்தையாக இருந்த என்னை) பார்க்க சொல்லி அனுப்புவாராம். எனக்கு பெயரிடப்பட்ட நாலைந்து நாளில் அவர் ஒரு திடீர் நொடியில் ஆஸ்பத்திரியிலேயே இறந்துபோனார். அவர் தனக்கு என்னவோ உள் வலி ஒன்றை உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் தன் டைரியில் - நாகலக்ஷ்மிக்கு பிரசவ வேதனை எனக்கு மரண வேதனை என்று எழுதியிருந்தார் - அந்த டைரி இப்போது அவர் மகன் - மாலி சித்தப்பாவிடம் - இருக்கிறது. 

மூட்டு வலி

அவருக்கு ஒரு முறை மூட்டு வலி அதிகமாகவே டாக்டரிடம் போனார். அவர் இது பல் சம்மந்தமாக வருவது. பற்களை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னாராம். தாத்தாவுக்கு நல்ல பல் வரிசை. என்ன செய்வது என்று தெரியாமல் டாக்டர் சற்றே உள்ளோ போகும்போது சொல்லிக்கொள்ளாமல் எழுந்து வந்துவிட்டாராம். மொட்டை தலையக்கும் முழங்கலுக்கும் முடிச்சு தெரியும். முகவைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு இதுதானோ?

பிள்ளயார்

உளுந்தாண்டர்கோவில் வீட்டில் பூஜை மந்தாசனம் உண்டு. சின்ன கோயில் போன்ற அமைப்பு. அதில் ஒரு பிள்ளயார் உண்டு. அது வெள்ளை எருக்கு மரத்தின் கிழக்கு புறமாக (கிழக்க தெற்கா நினைவில்லை) செல்லும் வேரில் செய்த சிலை. அதற்கு நிதமும் அபிஷேகத்துடன் பூஜை உண்டு. அதற்கு தினமும் ஒரு மஞ்சள் தோய்த்த துணி ஒரு கட்டி பூஜிப்பார்/ ஒரு முறை எலி அந்த பிள்ளையாரை இழுத்துக்கொண்டு போய்விட்டது (எலி பிள்ளையாரை இழுக்கும் வாகனம் என்று தெரியும். ஆனால் இப்படியா? ). தாத்தா பிள்ளையாரை தேடோ தேடோ என்று தேடினால் அது சமையல் அறையில் கிடைத்ததாம். அப்போதோ அல்லது பிறகோ அதன் இடப்புறத்தில் ஒரு துளை விழுந்துவிட்டது. பிறகு அப்பா பிறகு நான் அதை பூஜை செய்துவந்தோம். துளை பெரிதாகவே  மூளியாக இருப்பதை பூஜிக்க வேண்டாம் என்று எடுத்து வைத்துவிட்டோம்.