Sunday, August 12, 2012

நல்லது செய்தல் என்பது என்ன?

ஒருமுறை என் அப்பா இரவில் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்துவந்துகொண்டிருந்தார். போதும் போததுமான வெளிச்சம். வழியில் ஒரு சிறிய பொட்டலம் கீழே கிடப்பதைக் கண்டு எடுத்து தெருவிளக்கு வெளிச்சத்தில் பார்த்தார். ஒரு ரோஸ்நிற பொட்டலத்தில் இரண்டு தங்க மூக்குத்திகள். நாய்கள் தூங்கும் இரவு வீதி. அந்த பொட்டலம் கிடந்த இடத்திற்கு கொஞ்ச தூரத்தில் பொற்கொல்லர் வீடு. (பத்தர் என்று சொல்வதுண்டு). அவர் வீட்டின் கதைவைத் தட்டினார். இந்த நேரத்தில் என்ன என்று வந்த பத்தரிடம் இந்த பொட்டலம் கிடந்தது. அநேகமாக உங்களிடம் கடைசியாக வந்தரவர்களில் யாரோ  ஒருவர் தான் இதை தவறிவிட்டிருக்க வேண்டும்.  நான் அக்கம் பக்கம் யாரையாவது விசாரித்தால் அவர்கள் தங்களுடையது என்று சொல்லக் கூடும். அப்படி சொன்னாலும் அதை ஊர்ஜிதம் செய்வது கடினம். ஆனால தவறவிட்ட ஆள் நிச்சயமா உங்களை தேடி வரக்கூடும். தகுந்தபடி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

மறுநாள் அப்பா கடைவீதியில் இருக்கும்போது நகையை தவறவிட்ட நபர் அப்பாவின் பெயர் அவர் எங்கிருப்பார் என்று தெரிந்துகொண்டு வந்து அப்பாவை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னாராம். கிராமத்து ஆள். கல்யாணத்திற்காக வாங்கிக்கொண்டு போன மூக்குத்திகள். உங்கள மாதிரி நல்லவர்கள் இருப்பது எனக்கு வரவிருந்த கஷ்டம் விலகியது என்பதா சொன்ன போது அப்பா சொன்னாராம்.  “நான் என்ன பெரிதாக செய்துவிட்டேன்?  நீ கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து நல்ல காரியத்திற்காக வாங்கிய பொருள்.அது உன் உழைப்பின் சொத்து. அது  யார் கையில் கிடைத்திருந்தாலும் உன்னை வந்து சேர்ந்திருக்கும். அது மறுபடி உன் கைக்கு வந்து சேர்ந்தது உன் நல்ல எண்ணத்தாலும் ஒழுக்கத்தாலும் இருந்திருக்குமே தவிர என்ன நல்ல எண்ணத்தால் அல்லஎன்றாராம்.  அந்த வார்த்தைகள் என் மனதில் பதிந்து நான் எப்போதும் ஒருவருக்கு உதவி செய்ய நேர்ந்தால் அது என்னுடைய நல்ல தனத்தால் அல்ல. அவர்களுடைய நல்ல தனத்திற்கான உரியது. அவருக்கு நிகழ வேண்டிய உதவி என் மூலமாக நடந்திருக்கிறது என்றே தீவிரமாக நம்புகிறேன். கடைபிடிக்கிறேன். இந்த எண்ணம் என் வாழ்வின் எதிர்காலத்திலும் மாறாமல் இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.