Sunday, August 12, 2012

நல்லது செய்தல் என்பது என்ன?

ஒருமுறை என் அப்பா இரவில் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்துவந்துகொண்டிருந்தார். போதும் போததுமான வெளிச்சம். வழியில் ஒரு சிறிய பொட்டலம் கீழே கிடப்பதைக் கண்டு எடுத்து தெருவிளக்கு வெளிச்சத்தில் பார்த்தார். ஒரு ரோஸ்நிற பொட்டலத்தில் இரண்டு தங்க மூக்குத்திகள். நாய்கள் தூங்கும் இரவு வீதி. அந்த பொட்டலம் கிடந்த இடத்திற்கு கொஞ்ச தூரத்தில் பொற்கொல்லர் வீடு. (பத்தர் என்று சொல்வதுண்டு). அவர் வீட்டின் கதைவைத் தட்டினார். இந்த நேரத்தில் என்ன என்று வந்த பத்தரிடம் இந்த பொட்டலம் கிடந்தது. அநேகமாக உங்களிடம் கடைசியாக வந்தரவர்களில் யாரோ  ஒருவர் தான் இதை தவறிவிட்டிருக்க வேண்டும்.  நான் அக்கம் பக்கம் யாரையாவது விசாரித்தால் அவர்கள் தங்களுடையது என்று சொல்லக் கூடும். அப்படி சொன்னாலும் அதை ஊர்ஜிதம் செய்வது கடினம். ஆனால தவறவிட்ட ஆள் நிச்சயமா உங்களை தேடி வரக்கூடும். தகுந்தபடி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

மறுநாள் அப்பா கடைவீதியில் இருக்கும்போது நகையை தவறவிட்ட நபர் அப்பாவின் பெயர் அவர் எங்கிருப்பார் என்று தெரிந்துகொண்டு வந்து அப்பாவை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னாராம். கிராமத்து ஆள். கல்யாணத்திற்காக வாங்கிக்கொண்டு போன மூக்குத்திகள். உங்கள மாதிரி நல்லவர்கள் இருப்பது எனக்கு வரவிருந்த கஷ்டம் விலகியது என்பதா சொன்ன போது அப்பா சொன்னாராம்.  “நான் என்ன பெரிதாக செய்துவிட்டேன்?  நீ கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து நல்ல காரியத்திற்காக வாங்கிய பொருள்.அது உன் உழைப்பின் சொத்து. அது  யார் கையில் கிடைத்திருந்தாலும் உன்னை வந்து சேர்ந்திருக்கும். அது மறுபடி உன் கைக்கு வந்து சேர்ந்தது உன் நல்ல எண்ணத்தாலும் ஒழுக்கத்தாலும் இருந்திருக்குமே தவிர என்ன நல்ல எண்ணத்தால் அல்லஎன்றாராம்.  அந்த வார்த்தைகள் என் மனதில் பதிந்து நான் எப்போதும் ஒருவருக்கு உதவி செய்ய நேர்ந்தால் அது என்னுடைய நல்ல தனத்தால் அல்ல. அவர்களுடைய நல்ல தனத்திற்கான உரியது. அவருக்கு நிகழ வேண்டிய உதவி என் மூலமாக நடந்திருக்கிறது என்றே தீவிரமாக நம்புகிறேன். கடைபிடிக்கிறேன். இந்த எண்ணம் என் வாழ்வின் எதிர்காலத்திலும் மாறாமல் இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.





Saturday, July 14, 2012

அந்த காலத்தில் கிராமங்களில் நெல் மூட்டையை அருகில் உள்ள நகரத்து அரவை மில்லுக்கு கொண்டு சென்று - அரிசி நொய்  தவிடு என்று கொண்டு வருவது வழக்கம். அப்படி கொண்டு போக. என் தாத்தா மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றிவிட்டு . மிஷினுக்கு போ என்று வண்டி மாடுகளிடம் சொல்வாராம் . அவை இரண்டு மைல் தூரத்தில்   உள்ள மிஷினுக்கு தானாகவே - ஓட்டும் ஆள் இல்லாமல் - போகுமாம். பின்னால் சைக்கிளில் தாத்தா செல்வாராம். அப்படிப்பட்ட பழகிய மாடுகள் இருந்தன அப்போது .

Friday, June 8, 2012

சிவலோக நாதனைக் கண்டு

சின்ன தாத்தா சுப்பராமய்யரின் மனைவி விசாலாக்ஷி அம்மாள். சுப்பராமய்யர் கண்டிப்பும் கம்பீரமும் கலந்த ஆளுமை மிக்கவர். அவர் மீசையை மேலே முறுக்கியபடி வைத்திருப்பார். அதனால் மீசைக்காரர் என்றே  அழைக்கப்பட்டார். ரௌத்ரமும்  நேர்மையும் மிக்கவர். பயமற்றவர். அவருடைய மனைவி ஏதோ நோய்வாய்ப் பட்டார். அந்த காலம். என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நடுத்தர வயது. உடல் பலகீனமாகி பாட்டி நலிந்திருந்தார். அப்போது தனக்கு ஏதோ பயமாக இருப்பதாகவும் கண் முன் இருள் மண்டி வருவதாகவும் சொல்லி பயந்தாராம். தாத்தா ஏன்  பயப்படுகிறாய்? தைரியமாய் இரு. கடவுளை நினை என்றாராம். (அப்போதும் ஆணைகள்தான் !). ஏதாவது பாடு என்றாராம். பாட்டி "சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர் "என்ற பாடலை குரல் நடுங்க பாடினாராம். கண்ணீர் வழிய. இருளின் அச்சத்தைப் போக்கி அந்த பாடல் அவருக்கு உள் ஒளி தந்திருக்க வேண்டும். " பாடு/.. பாடு பாடிக்கொண்டே இரு" என்றாராம். தைரியம் கொள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம். நலிந்த குரலின் மெலிந்த சுரத்தில் பாட்டியின் பாடல் ஏதோ ஒரு கணத்தில் தேங்கி நின்றபோனது. அணைந்த அகல் விளக்கின் நெளியும் புகைபோல அந்த குரல் சற்றுநேரம் அந்த வெளியில் தேங்கி மறைந்தது.  பிறகு அங்கிருந்தவை கரைந்த கண்களும் உறைந்த முகமும்.

 அவர் கண்டிப்பாக சிவலோக நாதனைக் கண்டிருக்க வேண்டும்.

http://www.youtube.com/watch?v=e6l-9OaHyso
இந்த இணைப்பில் அந்த பாடலைக் கேளுங்கள். பாருங்கள். நந்தியின் கொம்பு இடையே சிவன். பிறகு நீல வானம். விசாலாட்சி பாட்டியின் பாட்டுக்கு ஏற்றபடி அமைந்திருக்கு இந்த ஒளிக்காட்சி கூட.  பாட்டியின் புகைப்படம் இல்லை. நான் பார்த்தது இல்லை. ஆனால் இந்த பாடலில் அவர் தெரிகிறார்.






அதிர்ச்சி வைத்தியம்

சுமார் அறுபது ஆண்டுக்கு முன் இருக்கலாம். மீசைக்கார தாத்தா என்றழைக்கப்படும் சின்ன தாத்தா வீட்டுக்குள் நுழையும்போது அத்தை (அவர் தங்கை ) பதட்டத்துடன் கண்ணீருடன் இருந்தவர் இவர் வருவதைக் கண்டவுடன் சட்டென்று கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டாராம் . (அவர் பேரை சொன்னாலே வீடே நிசப்தம் ஆகிவிடும். அப்படி ஒரு பயம் அனைவருக்கும்.) இதை கவனித்த தாத்தா என்னவென்று விசாரித்தாராம். விஷயம் ஒன்றுமில்லை. அத்தையின் மூத்த மகன் - சிறுவன் ஏதோ அடம் பிடித்து கேட்டதை தரவில்லை என்பதற்காக மொட்டை மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று மாடி மேல் போய்  நின்று கொண்டிருந்தானாம். தாத்தா கீழே இருந்து பார்த்தார். பையன் மேலே நிற்கிறான். கீழே இடப்புறம் பெரிய வைக்கோல் போர் இருக்கிறது. உடனே தாத்தா மளமளவென்று அருகிலிருந்த முள் செடியின் கிளைகளை வெட்டி வைக்கோலின் மேல் போட்டுவிட்டு "இப்போது குதி. குதிக்காவிட்டால் நான் வந்து தள்ளி விடுவேன்" என்றாராம். பையன் பத்திரமாக கீழே இறங்கி வந்தானாம்.  

Saturday, April 28, 2012

பெயர்காரணிகள்

பொதுவாக குடும்பத்தில் பெயர் வைக்கும் வழக்கம் என்பது சில நியதிகளை கொண்டிருக்கும். பொதுவாக குழந்தைக்கு மூன்று பெயர்கள் வைப்பது உண்டு. அதில் செல்லப்பெயர் - காரணப் பெயர் போக முதலாவதாக முந்தைய தலை முறையினரின் பெயர் வைப்பது உண்டு. எங்கள் குல தெய்வம் அந்தியூர் அருகே உள்ள குருநாத சுவாமி என்ற பெயருடைய முருகன். ஆதலால் முதல் குழந்தைக்கு குரு என்கிற வார்த்தை சேர்த்து பெயர் வைப்பது வழக்கமாய் இருந்திருக்கிறது. பெண்களுக்கு கூட குரு என்கிற வார்த்தை சேர்த்தே வைப்பதுண்டு. ஏனோ என்னுடைய கிளை தாத்தாக்கள் அதை தொடரவில்லை. மற்ற கிளைகள் சில இன்னும் தொடர்கின்றன. ஆகவே மறந்து போய்விட்ட தொடர்புகள் கூட இந்த மூலப்பெயர் கொண்டு மீண்டும் தொடர்பு கொள்ள ஏதுவாகலாம். எனக்கு தெரிந்து இப்படி பெயர் வைத்து இருப்பவர்கள் இருவர்.


இவர்கள் பெருமைக்கும் மதிப்பிற்கும் உரியவர்கள். முகஸ்துதி அல்ல.  

வேறு யாரும் கூட இப்படி வைத்திருக்கலாம். ஆனால் என்னுடைய கவனத்திற்கு வரவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து தெரிவிக்கலாம்.

 

வறுமையில் செம்மை - மார்கண்டேயன்

மார்கண்டேயன் - அப்பாவின் தாத்தா. மிகச்சாதாரண குடும்ப நபர். வசதி எல்லாம் கிடையாது. அவர் உளுந்தாண்டார் கோவில் ஊரில் இருந்தார். ஊரின் செல்வந்தரும் பெரிய தனக்காரரும் ஆனா அப்பாசாமி நயினார் என்பவர் அவருடைய ஆத்ம நண்பர். ஒரு முறை வீடு தீப்பற்றி எரிந்து போனபோது (இது பற்றி இந்த தளத்திலேயே வேறொரு இடத்தில் சொல்லப்பட்டு உள்ளது ) உடமைகள் வீடு எல்லாம் எரிந்து போயின. கல் உரல் கூட வெடித்துச் சிதறி இருக்கிறது. அப்போது என்ன செய்வது என்று யோசித்தபோது அப்பாசாமி நயினார் தான் வேறு ஏற்பாடு செய்வதாக சொன்ன பொது "அதெல்லாம் வேண்டாம்" என்று அன்புடன் மறுத்து நெய்வேலிக்கு அருகே உள்ள வெள்ளூர் என்ற கிராமத்திருக்கு போய்விட்டாராம். அந்த வெள்ளூர் இப்போது தேடினாலும் கிடைக்காது. ஏன் என்றால் நெய்வேலி சுரங்க விரிவாக்கத்தில் அது தோண்டப்பட்டு மறைந்து விட்டது. 

நட்புக்கு இடையில் பொரளாதார விஷயம் அதற்கு பங்கம் விளைவிக்க கூடாது மற்றும் சுய கௌரவம் காரணமாக அவர் அப்படி செய்திருக்கிறார் என்றே சொல்கிறார்கள்.

வறுமையில் செம்மை என்கிறார்களே ! அது இதுவோ ? 

Friday, April 27, 2012

வில்வ சருகு

காஞ்சி முனி ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் சொல்லி இருப்பார். பெரிய அளவில் பூஜை இத்யாதிகள் செய்ய முடியவில்ல என்றால் பரவாயில்லை. சிவா என்று நினைத்து ஒரு காய்ந்த வில்வ சருகை போட்டுவிட்டு நமஸ்காரம் செய் போதும்.

 என் அப்பா அதிகம் பேசாத (வெற்றிலை குதப்பிய வாய் - பேச்சு குறைவுதானே ! ) செயல் தீவிரம் உடைய நபர். சிறிதும் சப்தமின்றி அவர் சின்ன சின்ன உதவிகள் பிறருக்கு செய்திருக்கிறார். அவருக்கு அதிலே  ஒரு திருப்தி இருந்திருக்கக் கூடும்.

எனக்கு விவரம் தெரிந்து சில.  முன்பு சில இருந்திருக்கக் கூடும். துர்க்கம் பாட்டி என்று அழைக்கப்படும் முதிய பார்வை போன பாட்டி - 90 வயதுக்கு மேல் இருக்கும் -   தடுமாறி விழுந்து மண்டையில் அடி பட்டபோது உடனே ஓடிச்சென்று அவருக்கு மருந்து வைத்து கட்டு போட்டு விட்டார். அப்போது பாட்டி தான் குளிக்க வேண்டும் என்று சொன்னபோது மற்றவர்கள் கண்டுகொள்ளாதபோது குளிக்கட்டும் என்று அந்த வீட்டு அம்மையாரிடம் சொல்லி வெந்நீர் வைத்து குளிப்பாட்டி விட்டு அலாக்காக தூக்கி படுக்க வைத்தார். அப்போது அருகே டிஞ்சர் பாட்டிலும் பஞ்சும் கையில் வைத்திருந்த சிறுவன் நான். சில நாட்கள் பிறகு பாட்டி இயற்கையில் கலந்தார். அதுதான் அவருடைய கடைசி குளியல்.

கடலூரில் ஒரு உறவினர் வீட்டு பெரியவர் தேகம் மெலிந்து நோயுற்று நடக்க முடியாமல் இருந்தார். அவரை பார்க்க சென்ற என் அப்பாவிடம் "கல்யாணம் ! குளிச்சி ரெண்டு மூணு வாரம் ஆகுது.. நான் குளிக்கணும் !" என்றதால் அவருக்கு குளிப்பதற்கு ஏற்பாடு செய்து, குளிப்பாட்டி, உடல் துடைத்து , நீறு வைத்து நாற்காலியில் உட்கார வைத்து அவருடய படுக்கைகளை வேலைக்காரியிடம் துவைக்க சொல்லி நல்ல படுக்கை தயார் செய்து தந்துவிட்டு வந்தாராம். ஒரு மாதம் கழித்து அவர் வேறு ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே அவர் இயற்கை எய்தினார். அப்போது அங்கிருந்தவர் சொன்னாராம். அவருக்கு சுத்தம் அதிகம். அவர் இறுதியாக குளித்தது உன் கையால்தான் என்று.

ஒரு முறை ஒரு தொழு நோயாளி வீதியில் படுத்து இருக்க அவருடய மகள்தான் அவரை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக போன அப்பாவிடம் அவர் ஏதோ சொல்ல - அப்பா கூட இருந்து அந்த நோயாளி படுத்து இருந்த சாக்கை மாற்றி சுத்தம் செய்து - அவர் மகளிடம் வெந்நீர் வைத்து குளிப்பாட்டச் சொல்லி உடனிருந்து உதவினார்.

அவருக்கே பக்கவாதம் வந்தபோது   மிகச்சிறிய குளியல் அறையில் அவரை ஸ்டூல் போட்டு உட்காரவைத்து குளிப்பாட்டும்போது நானே பாதி குளித்துவிடுவேன். அப்போது ஒரு நாள் அவர் "எனக்கு நானே தண்ணி ஊத்தி குளிச்சிக்க கூட முடியாம போச்சு.. உனக்கு சிரமம் தரேன் " என்ற போது - "அப்பா நீங்க என் அப்பா. நான் உங்க மகன். இதுல என்ன இருக்கு. ஆனா நீங்க மத்தவங்களுக்கு போய் குளிப்பாட்டி உதவி பண்ணி இருக்கீங்க. உங்க அப்பாவுக்கும் செஞ்சிருகீங்க " என்றபோது - குளிக்கும் தண்ணீரோடு கலந்த அவர் கண்ணீரை நான் கவனித்து அதனுடன் என் கண்ணீரையும் கலந்து விட்டிருக்கிறேன்.

இப்போது புரிகிறது. அவர் செய்தது மிகச் சிறிய ஆனால் மனம்  நிறைந்த செயல்கள். காஞ்சி முனி சொன்னது போல காய்ந்த வில்வ இல்லை ஒன்றை போடுதல். 

பக்கல நில படி

பக்கல நில படி ..கொலுசே முச்சட பாக தெல்ப ராதா ! 

கரஹராப்ரியாவில் - தியாகப்ரம்மம் சீதையையும் லட்சுமணையும் பார்த்து கேட்கிறார்!  இராமனின் இரு புறமும் சேவை புரிந்து சந்தோஷிக்கும் ரகசியம் என்ன என்று சொல்வீர்களா? சாஷ்ட்டங்கமாக விழுந்து நமஸ்கரித்து வந்தனம் செய்வீர்களா? அல்லது ராமநாமம் சொல்லி மகிழ்வீர்களா? 

என்னுடைய பாட்டி - அப்பாவின் அம்மா - அச்சி பாட்டி என்று பெயர். மிக நன்றாகப் பாடுவாராம். வழக்கம் போல கலையும் சங்கீதமும் அடுப்படிப் புகையையும். ருப்பு உரல் சத்தத்தையும் தாண்டி வெளியே வந்ததில்லை. தாத்தாவுக்கும் பாட்டு என்றால் சரிப்பட்டு வராது. வீட்டில் நிறைய பெண் குழந்தைகளாய் இருந்ததால் பாட்டு நாட்டியம் இதெல்லாம் ஆதரிக்கப் பட்டதில்லை. (அவர் பயம் அவருக்கு ! ) தாத்தா இல்லாத சமயம் தன் பெண்களுக்கு பாட்டு சொல்லிப் பழக்கினார் பாட்டி. அவருடைய நான்கு மகள்கள் - இன்னொரு தாத்தாவின் இரண்டு மகள்கள். தாத்தா வருகிரார என்று ஒருவர் காவல் பார்க்க மற்றவர்கள் பாட்டு பழகி - பயந்து பயந்து பழகிய பாடலில் அனைவரும் மிக நன்றாக பாடுவார்கள். பாட்டின் வாசனை - ஆண்களும் நன்றாக பாடுவார்கள். என் அப்பா ஸ்ரீ கணபதிம் பாடியதை கேட்டிருக்கிறேன்.   அது கற்பூர வாசனை என்றாலும் அது எனக்கும் தெரிந்திருப்பதே அதன் வீச்சு.
தான் அறிந்த பாட்டின் சாகித்யங்களை பாட்டி ஒரு நோட்டில் எழுதி ரகசியமாக வைத்திருந்தார். தன் ஐம்பது வயது சொச்சத்தில் அவர் காலம் போன பின் - என் அப்பா அவற்றையெல்லாம் எடுத்து அட்டை போட்டு பத்திரப் படுத்தி வைத்திருந்தார். பழைய வாசனையும் பழமையின் வாசனயுமாய் இருந்த அதை என்னுடைய அத்தை ஒருவரிடம் தந்து வைத்திருக்கிறேன். அவருக்கு அது அம்மாவின் பொக்கிஷம் அல்லவா !
 கல்யாண நலுங்குப்பாட்டு முதல், நாகவல்லி பாட்டு முதல் - குழந்தை தாலாட்டு வரை ஒருவருக்கு அத்துபடி. கல்யாணத்தின் ஒவ்வொரு சடங்குக்கும் ஒரு பாட்டு பாடுவார். கல்யாண கலகலப்பு சப்தம், நசநசப்பு, கூச்சல், மேளவாத்தியம் - இதையெல்லாம் தாண்டி - கணீர் - என்று மணியின் நாதம் போல பொங்கி எழும் அவரது குரல்.  பக்கல நில படி இந்த பாட்டின் அநுபல்லவியில் சுக்கல ராய என்று உச்சத்தில் ஆரம்பித்து மேலே மேலே போகும்போது அவருடைய தொண்டை நரம்புகள் மின்னல் கோடி போல் விம்மி விம்மி அந்த ராகம் எழுப்பும் உணர்வுகள்  - எழுத முயன்றால் வார்த்தைகள் தோற்கும் .

மேற்சொன்ன இந்த பாட்டு பாட்டிக்கு பிடித்த பாட்டு.   யதேச்சையாக பண்பலையில் கேட்டபோது நானும் அறியாமல் என் கண்கள் பனித்தன. நான் பாட்டியை பார்த்ததே இல்லை. என் நேர் மூத்த சகோதரியே பார்த்தது இல்லை.
எது என்னைத் தொட்டது? 
எது என்னை அசைத்தது? 
எது என்னை உலுக்கியது? 
எது என்னை கரைத்தது?

தலைமுறை தலைமுறையாக கைமாறி கைமாறி வந்து கொண்டிருக்கும் இந்த ராகங்களும்,  அவற்றைப் பாடினவர்கள் பற்றி- அதைச் சுற்றி எழும் கதைகளும் பிரஸ்தாபங்களும்தானே ?

கண்ணீர் மல்க தியாகராஜர் சீதையிடமும் லட்சுமனிடமும் கேட்கும் போது 'பக்கல நிலபடி' என் பாட்டியும் கேட்பது போல் இருந்தது. நான் பார்த்திராத என் அச்சி பாட்டியை  என்னால் இந்த ராகத்தில் காண முடிந்தது !






Sunday, January 1, 2012

தாத்தா - குரு

பெரிய தாத்தா லௌகீகமானவர் . அது கடைந்த கடைசலில் நிறைய உழன்றிருக்கிறார். ஆனாலும் அவருக்குள்ளே ஆத்மீக ரசம் ஒன்று கிணற்றில் ஊரும் மௌனமான ஊற்று போல கசிந்து கொண்டே இருந்திருக்கிறது. அதை அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு அப்போது அவர் உடன் யாரும் இல்லாமல் போனதும், தான் உணர்ந்த ஆன்ம விசாரணை விஷயத்தை பிறருக்கு அவர் சொல்லாமல் அல்லது சொல்ல முடியாமல் போனதும்தான் அவருடைய இன்னொரு பக்கத்தை  யாரும் அறிய முடியாமலே போயிருக்கிறது என்று என் எண்ணம். இந்த எண்ணம் எப்படி எனக்கு தோன்றுகிறது என்றால் சத்யம் அக்கா தன்னுடைய தற்போதைய சத் விஷயத்துக்கு அவரே மூலமாய் இருந்திருக்கிறார் என்று தற்போது உணர்வதே காரணம்.

அவளுக்கு எட்டு வயதே  இருக்கும்போது கோவிலுக்கு அவரோடு செல்வதும் இருட்டு என்பதால் அவர் விரலைப் பிடித்தபடியே அவர் தட்சிணாமூர்த்தி சிலை யருகே நின்று த்யாநிக்கும்போது கூடவே இருந்ததும் - அந்த சாரலும் சாரமும் தான் இன்று அவளிடம் வித்து விட்டிருக்கிறது என்று உணர்கிறாள். அப்போதே தாத்தா சொல்லுவாராம். "கடவுளிடம் அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் வேண்டிக்கொள்ள வேண்டாம்.  எது நம் நன்மைக்கு  என்பதெல்லாம் அவருக்கு தெரியும். நாம் வேண்டும் விஷயங்கள் நமக்கு தீங்காக கூட அமையலாம். ஆகவே அவரிடம் டிமாண்டு செய்ய வேண்டியதில்லை என்று " இந்த ஞானத்தெளிவை அவர் சிறுமியான சத்யாவிடம் சொல்லி இருக்கிறார்.ஆகவேதான் இப்போது அவள் அவரை தாத்தா மூலம் கொண்ட தன் முதல் குரு என்று உணர்கிறாள். இன்னும் அவரிடம் என்னென்ன பொக்கிஷங்கள் இருந்து நமக்கு தெரியாமலே போனதுவோ என்று தோன்றுகிறது இப்போது.