Sunday, January 1, 2012

தாத்தா - குரு

பெரிய தாத்தா லௌகீகமானவர் . அது கடைந்த கடைசலில் நிறைய உழன்றிருக்கிறார். ஆனாலும் அவருக்குள்ளே ஆத்மீக ரசம் ஒன்று கிணற்றில் ஊரும் மௌனமான ஊற்று போல கசிந்து கொண்டே இருந்திருக்கிறது. அதை அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு அப்போது அவர் உடன் யாரும் இல்லாமல் போனதும், தான் உணர்ந்த ஆன்ம விசாரணை விஷயத்தை பிறருக்கு அவர் சொல்லாமல் அல்லது சொல்ல முடியாமல் போனதும்தான் அவருடைய இன்னொரு பக்கத்தை  யாரும் அறிய முடியாமலே போயிருக்கிறது என்று என் எண்ணம். இந்த எண்ணம் எப்படி எனக்கு தோன்றுகிறது என்றால் சத்யம் அக்கா தன்னுடைய தற்போதைய சத் விஷயத்துக்கு அவரே மூலமாய் இருந்திருக்கிறார் என்று தற்போது உணர்வதே காரணம்.

அவளுக்கு எட்டு வயதே  இருக்கும்போது கோவிலுக்கு அவரோடு செல்வதும் இருட்டு என்பதால் அவர் விரலைப் பிடித்தபடியே அவர் தட்சிணாமூர்த்தி சிலை யருகே நின்று த்யாநிக்கும்போது கூடவே இருந்ததும் - அந்த சாரலும் சாரமும் தான் இன்று அவளிடம் வித்து விட்டிருக்கிறது என்று உணர்கிறாள். அப்போதே தாத்தா சொல்லுவாராம். "கடவுளிடம் அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் வேண்டிக்கொள்ள வேண்டாம்.  எது நம் நன்மைக்கு  என்பதெல்லாம் அவருக்கு தெரியும். நாம் வேண்டும் விஷயங்கள் நமக்கு தீங்காக கூட அமையலாம். ஆகவே அவரிடம் டிமாண்டு செய்ய வேண்டியதில்லை என்று " இந்த ஞானத்தெளிவை அவர் சிறுமியான சத்யாவிடம் சொல்லி இருக்கிறார்.ஆகவேதான் இப்போது அவள் அவரை தாத்தா மூலம் கொண்ட தன் முதல் குரு என்று உணர்கிறாள். இன்னும் அவரிடம் என்னென்ன பொக்கிஷங்கள் இருந்து நமக்கு தெரியாமலே போனதுவோ என்று தோன்றுகிறது இப்போது.




1 comment:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எல்லாமே மிகக் கச்சிதமாக நறுக்காக இருக்கின்றன ரமேஷ் கல்யாண்.

எதேச்சையாக உள்ளே நுழைந்தேன். உங்களிடம் நான் கற்க நிறைய இருப்பதாக உணர்ந்தேன்.

மற்றொரு முறை சந்திப்போம்.வாழ்த்துக்கள்.