Friday, April 27, 2012

பக்கல நில படி

பக்கல நில படி ..கொலுசே முச்சட பாக தெல்ப ராதா ! 

கரஹராப்ரியாவில் - தியாகப்ரம்மம் சீதையையும் லட்சுமணையும் பார்த்து கேட்கிறார்!  இராமனின் இரு புறமும் சேவை புரிந்து சந்தோஷிக்கும் ரகசியம் என்ன என்று சொல்வீர்களா? சாஷ்ட்டங்கமாக விழுந்து நமஸ்கரித்து வந்தனம் செய்வீர்களா? அல்லது ராமநாமம் சொல்லி மகிழ்வீர்களா? 

என்னுடைய பாட்டி - அப்பாவின் அம்மா - அச்சி பாட்டி என்று பெயர். மிக நன்றாகப் பாடுவாராம். வழக்கம் போல கலையும் சங்கீதமும் அடுப்படிப் புகையையும். ருப்பு உரல் சத்தத்தையும் தாண்டி வெளியே வந்ததில்லை. தாத்தாவுக்கும் பாட்டு என்றால் சரிப்பட்டு வராது. வீட்டில் நிறைய பெண் குழந்தைகளாய் இருந்ததால் பாட்டு நாட்டியம் இதெல்லாம் ஆதரிக்கப் பட்டதில்லை. (அவர் பயம் அவருக்கு ! ) தாத்தா இல்லாத சமயம் தன் பெண்களுக்கு பாட்டு சொல்லிப் பழக்கினார் பாட்டி. அவருடைய நான்கு மகள்கள் - இன்னொரு தாத்தாவின் இரண்டு மகள்கள். தாத்தா வருகிரார என்று ஒருவர் காவல் பார்க்க மற்றவர்கள் பாட்டு பழகி - பயந்து பயந்து பழகிய பாடலில் அனைவரும் மிக நன்றாக பாடுவார்கள். பாட்டின் வாசனை - ஆண்களும் நன்றாக பாடுவார்கள். என் அப்பா ஸ்ரீ கணபதிம் பாடியதை கேட்டிருக்கிறேன்.   அது கற்பூர வாசனை என்றாலும் அது எனக்கும் தெரிந்திருப்பதே அதன் வீச்சு.
தான் அறிந்த பாட்டின் சாகித்யங்களை பாட்டி ஒரு நோட்டில் எழுதி ரகசியமாக வைத்திருந்தார். தன் ஐம்பது வயது சொச்சத்தில் அவர் காலம் போன பின் - என் அப்பா அவற்றையெல்லாம் எடுத்து அட்டை போட்டு பத்திரப் படுத்தி வைத்திருந்தார். பழைய வாசனையும் பழமையின் வாசனயுமாய் இருந்த அதை என்னுடைய அத்தை ஒருவரிடம் தந்து வைத்திருக்கிறேன். அவருக்கு அது அம்மாவின் பொக்கிஷம் அல்லவா !
 கல்யாண நலுங்குப்பாட்டு முதல், நாகவல்லி பாட்டு முதல் - குழந்தை தாலாட்டு வரை ஒருவருக்கு அத்துபடி. கல்யாணத்தின் ஒவ்வொரு சடங்குக்கும் ஒரு பாட்டு பாடுவார். கல்யாண கலகலப்பு சப்தம், நசநசப்பு, கூச்சல், மேளவாத்தியம் - இதையெல்லாம் தாண்டி - கணீர் - என்று மணியின் நாதம் போல பொங்கி எழும் அவரது குரல்.  பக்கல நில படி இந்த பாட்டின் அநுபல்லவியில் சுக்கல ராய என்று உச்சத்தில் ஆரம்பித்து மேலே மேலே போகும்போது அவருடைய தொண்டை நரம்புகள் மின்னல் கோடி போல் விம்மி விம்மி அந்த ராகம் எழுப்பும் உணர்வுகள்  - எழுத முயன்றால் வார்த்தைகள் தோற்கும் .

மேற்சொன்ன இந்த பாட்டு பாட்டிக்கு பிடித்த பாட்டு.   யதேச்சையாக பண்பலையில் கேட்டபோது நானும் அறியாமல் என் கண்கள் பனித்தன. நான் பாட்டியை பார்த்ததே இல்லை. என் நேர் மூத்த சகோதரியே பார்த்தது இல்லை.
எது என்னைத் தொட்டது? 
எது என்னை அசைத்தது? 
எது என்னை உலுக்கியது? 
எது என்னை கரைத்தது?

தலைமுறை தலைமுறையாக கைமாறி கைமாறி வந்து கொண்டிருக்கும் இந்த ராகங்களும்,  அவற்றைப் பாடினவர்கள் பற்றி- அதைச் சுற்றி எழும் கதைகளும் பிரஸ்தாபங்களும்தானே ?

கண்ணீர் மல்க தியாகராஜர் சீதையிடமும் லட்சுமனிடமும் கேட்கும் போது 'பக்கல நிலபடி' என் பாட்டியும் கேட்பது போல் இருந்தது. நான் பார்த்திராத என் அச்சி பாட்டியை  என்னால் இந்த ராகத்தில் காண முடிந்தது !






1 comment:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நினைவுகளில் ஏறி தொலைவுகளைக் கடத்திக்கொண்டுபோகிற அருமையான சிந்தனையும், கிளறல்களும்.

வாழ்த்துக்கள் ரமேஷ்கல்யாண் நீங்களே பார்த்திராத பாட்டியை எங்களையும் பார்க்க வைத்ததற்கு.