Friday, April 27, 2012

வில்வ சருகு

காஞ்சி முனி ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் சொல்லி இருப்பார். பெரிய அளவில் பூஜை இத்யாதிகள் செய்ய முடியவில்ல என்றால் பரவாயில்லை. சிவா என்று நினைத்து ஒரு காய்ந்த வில்வ சருகை போட்டுவிட்டு நமஸ்காரம் செய் போதும்.

 என் அப்பா அதிகம் பேசாத (வெற்றிலை குதப்பிய வாய் - பேச்சு குறைவுதானே ! ) செயல் தீவிரம் உடைய நபர். சிறிதும் சப்தமின்றி அவர் சின்ன சின்ன உதவிகள் பிறருக்கு செய்திருக்கிறார். அவருக்கு அதிலே  ஒரு திருப்தி இருந்திருக்கக் கூடும்.

எனக்கு விவரம் தெரிந்து சில.  முன்பு சில இருந்திருக்கக் கூடும். துர்க்கம் பாட்டி என்று அழைக்கப்படும் முதிய பார்வை போன பாட்டி - 90 வயதுக்கு மேல் இருக்கும் -   தடுமாறி விழுந்து மண்டையில் அடி பட்டபோது உடனே ஓடிச்சென்று அவருக்கு மருந்து வைத்து கட்டு போட்டு விட்டார். அப்போது பாட்டி தான் குளிக்க வேண்டும் என்று சொன்னபோது மற்றவர்கள் கண்டுகொள்ளாதபோது குளிக்கட்டும் என்று அந்த வீட்டு அம்மையாரிடம் சொல்லி வெந்நீர் வைத்து குளிப்பாட்டி விட்டு அலாக்காக தூக்கி படுக்க வைத்தார். அப்போது அருகே டிஞ்சர் பாட்டிலும் பஞ்சும் கையில் வைத்திருந்த சிறுவன் நான். சில நாட்கள் பிறகு பாட்டி இயற்கையில் கலந்தார். அதுதான் அவருடைய கடைசி குளியல்.

கடலூரில் ஒரு உறவினர் வீட்டு பெரியவர் தேகம் மெலிந்து நோயுற்று நடக்க முடியாமல் இருந்தார். அவரை பார்க்க சென்ற என் அப்பாவிடம் "கல்யாணம் ! குளிச்சி ரெண்டு மூணு வாரம் ஆகுது.. நான் குளிக்கணும் !" என்றதால் அவருக்கு குளிப்பதற்கு ஏற்பாடு செய்து, குளிப்பாட்டி, உடல் துடைத்து , நீறு வைத்து நாற்காலியில் உட்கார வைத்து அவருடய படுக்கைகளை வேலைக்காரியிடம் துவைக்க சொல்லி நல்ல படுக்கை தயார் செய்து தந்துவிட்டு வந்தாராம். ஒரு மாதம் கழித்து அவர் வேறு ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே அவர் இயற்கை எய்தினார். அப்போது அங்கிருந்தவர் சொன்னாராம். அவருக்கு சுத்தம் அதிகம். அவர் இறுதியாக குளித்தது உன் கையால்தான் என்று.

ஒரு முறை ஒரு தொழு நோயாளி வீதியில் படுத்து இருக்க அவருடய மகள்தான் அவரை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக போன அப்பாவிடம் அவர் ஏதோ சொல்ல - அப்பா கூட இருந்து அந்த நோயாளி படுத்து இருந்த சாக்கை மாற்றி சுத்தம் செய்து - அவர் மகளிடம் வெந்நீர் வைத்து குளிப்பாட்டச் சொல்லி உடனிருந்து உதவினார்.

அவருக்கே பக்கவாதம் வந்தபோது   மிகச்சிறிய குளியல் அறையில் அவரை ஸ்டூல் போட்டு உட்காரவைத்து குளிப்பாட்டும்போது நானே பாதி குளித்துவிடுவேன். அப்போது ஒரு நாள் அவர் "எனக்கு நானே தண்ணி ஊத்தி குளிச்சிக்க கூட முடியாம போச்சு.. உனக்கு சிரமம் தரேன் " என்ற போது - "அப்பா நீங்க என் அப்பா. நான் உங்க மகன். இதுல என்ன இருக்கு. ஆனா நீங்க மத்தவங்களுக்கு போய் குளிப்பாட்டி உதவி பண்ணி இருக்கீங்க. உங்க அப்பாவுக்கும் செஞ்சிருகீங்க " என்றபோது - குளிக்கும் தண்ணீரோடு கலந்த அவர் கண்ணீரை நான் கவனித்து அதனுடன் என் கண்ணீரையும் கலந்து விட்டிருக்கிறேன்.

இப்போது புரிகிறது. அவர் செய்தது மிகச் சிறிய ஆனால் மனம்  நிறைந்த செயல்கள். காஞ்சி முனி சொன்னது போல காய்ந்த வில்வ இல்லை ஒன்றை போடுதல். 

No comments: