Friday, June 8, 2012

சிவலோக நாதனைக் கண்டு

சின்ன தாத்தா சுப்பராமய்யரின் மனைவி விசாலாக்ஷி அம்மாள். சுப்பராமய்யர் கண்டிப்பும் கம்பீரமும் கலந்த ஆளுமை மிக்கவர். அவர் மீசையை மேலே முறுக்கியபடி வைத்திருப்பார். அதனால் மீசைக்காரர் என்றே  அழைக்கப்பட்டார். ரௌத்ரமும்  நேர்மையும் மிக்கவர். பயமற்றவர். அவருடைய மனைவி ஏதோ நோய்வாய்ப் பட்டார். அந்த காலம். என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நடுத்தர வயது. உடல் பலகீனமாகி பாட்டி நலிந்திருந்தார். அப்போது தனக்கு ஏதோ பயமாக இருப்பதாகவும் கண் முன் இருள் மண்டி வருவதாகவும் சொல்லி பயந்தாராம். தாத்தா ஏன்  பயப்படுகிறாய்? தைரியமாய் இரு. கடவுளை நினை என்றாராம். (அப்போதும் ஆணைகள்தான் !). ஏதாவது பாடு என்றாராம். பாட்டி "சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர் "என்ற பாடலை குரல் நடுங்க பாடினாராம். கண்ணீர் வழிய. இருளின் அச்சத்தைப் போக்கி அந்த பாடல் அவருக்கு உள் ஒளி தந்திருக்க வேண்டும். " பாடு/.. பாடு பாடிக்கொண்டே இரு" என்றாராம். தைரியம் கொள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம். நலிந்த குரலின் மெலிந்த சுரத்தில் பாட்டியின் பாடல் ஏதோ ஒரு கணத்தில் தேங்கி நின்றபோனது. அணைந்த அகல் விளக்கின் நெளியும் புகைபோல அந்த குரல் சற்றுநேரம் அந்த வெளியில் தேங்கி மறைந்தது.  பிறகு அங்கிருந்தவை கரைந்த கண்களும் உறைந்த முகமும்.

 அவர் கண்டிப்பாக சிவலோக நாதனைக் கண்டிருக்க வேண்டும்.

http://www.youtube.com/watch?v=e6l-9OaHyso
இந்த இணைப்பில் அந்த பாடலைக் கேளுங்கள். பாருங்கள். நந்தியின் கொம்பு இடையே சிவன். பிறகு நீல வானம். விசாலாட்சி பாட்டியின் பாட்டுக்கு ஏற்றபடி அமைந்திருக்கு இந்த ஒளிக்காட்சி கூட.  பாட்டியின் புகைப்படம் இல்லை. நான் பார்த்தது இல்லை. ஆனால் இந்த பாடலில் அவர் தெரிகிறார்.






அதிர்ச்சி வைத்தியம்

சுமார் அறுபது ஆண்டுக்கு முன் இருக்கலாம். மீசைக்கார தாத்தா என்றழைக்கப்படும் சின்ன தாத்தா வீட்டுக்குள் நுழையும்போது அத்தை (அவர் தங்கை ) பதட்டத்துடன் கண்ணீருடன் இருந்தவர் இவர் வருவதைக் கண்டவுடன் சட்டென்று கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டாராம் . (அவர் பேரை சொன்னாலே வீடே நிசப்தம் ஆகிவிடும். அப்படி ஒரு பயம் அனைவருக்கும்.) இதை கவனித்த தாத்தா என்னவென்று விசாரித்தாராம். விஷயம் ஒன்றுமில்லை. அத்தையின் மூத்த மகன் - சிறுவன் ஏதோ அடம் பிடித்து கேட்டதை தரவில்லை என்பதற்காக மொட்டை மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று மாடி மேல் போய்  நின்று கொண்டிருந்தானாம். தாத்தா கீழே இருந்து பார்த்தார். பையன் மேலே நிற்கிறான். கீழே இடப்புறம் பெரிய வைக்கோல் போர் இருக்கிறது. உடனே தாத்தா மளமளவென்று அருகிலிருந்த முள் செடியின் கிளைகளை வெட்டி வைக்கோலின் மேல் போட்டுவிட்டு "இப்போது குதி. குதிக்காவிட்டால் நான் வந்து தள்ளி விடுவேன்" என்றாராம். பையன் பத்திரமாக கீழே இறங்கி வந்தானாம்.