Monday, January 25, 2010

ஊமை ஜோசியன்

ஊமை ஜோசியன். இவரிடம் பாலகொல்லை பெரியப்பாவுக்கும் மிகுந்த நம்பிக்கை உண்டு. அவ்வப்போது அவன் வந்து இவரிடம் ஏதாவது பேசுவது (!) உண்டு. அவன் ஜாதகமா கைரேகையா என்னவோ நினைவில் இல்லை. அவருக்கு ஆரூடம் சொல்லுவான். அடிக்கடி ஊமை ஜோசியன் சொன்னான் என்று சொல்வார். பெரும்பாலும் அவை நடந்திருக்கின்றன என்று சொல்வார்கள். சில சமயம் இதை செய் இதை செய்யாதே என்றும் சொல்வானாம். குடும்ப ரீதியில் அவனை ஒரு ஆரூட காம்பஸ் என்று சொல்லலாம். அவன் சொல்வது அவருக்குதான் புரியும். பெரியம்மாவுக்கு கூட புரியும்.

ராமமூர்த்தி அய்யர் - தேள் கடி சிகிச்சை

ராமமூர்த்தி அய்யர் எனக்கு பெரியப்பா - என் அப்பாவுக்கு அண்ணன் உறவு - அவர் பள்ளிக்கூட வாத்தியார். முன்பு மணியக்காரராக இருந்தார். அதனால் அவரை மணியகார் பெரியப்பா என்போம். நல்ல உயரம். சிறிது நாள் தாடி வைத்திருந்தார். நிலபுலங்கள் உண்டு. நிறைய மாடுகள் உண்டு. வீட்டின் முன் ஒரு பண்ணை அளவுக்கு மாடுகள் இருக்கும். விவசாய மனம் உடையவர். அவர் வீட்டில் ஒரு கண்ணாடி பாட்டிலில் பொட்டசியம் பெர்மங்கனட் இருக்கும். இன்னொரு பாட்டிலில் சர்க்கரை இருக்கும். இதுதான் தேள் கடி மருந்து. ஊரில் யாருக்கு தேள் கொட்டினாலும் உடனே அங்கு ஓடி வருவார்கள். தேள் கடி பாட இடம் - கடி வாய் - லேசாக வேர்த்து இருக்குமாம். பெரும்பாலும் இவை இருட்டு வலையில்தான் நடக்கும் . "தேள்தானா பாத்தியா" என்று கேட்டுவிட்டு சிகிச்சை செய்வார். சிறு துளி கரு நிற பொட்டாசியம் பர்மந்கனட் வைத்து அதன் மேல் சிட்டிகை சர்க்கரை வைத்து ஒரு சொட்டு நீர் விட்டு சிறு துடைப்ப குச்சியால் லேசாக அந்த பொடிகளை நகர்த்துவார். கடிவாய் இடம் கண்டவுடன் அது சுறு சுறு சுறுவென பொங்கும். அப்போது கடிபட்டவர் அலறுவார். "அவ்ளோதான் சரியாய் போச்சு போ" என்று சொல்லி அனுப்பிவிடுவார். இந்த சிகிச்சையை வேடிக்கை பார்க்க எப்போதும் ஒரு சிறுவர் கூட்டம் இருக்கும். 

சுப்பராமய்யர் டைரி

இதை முன்பே பதிவு செய்தேனோ என்னவோ தெரியவில்லை. செய்திருந்தால் இது கூறியது கூறல் வகைப் பிழையாக கொள்வீராக. 


மீசைக்கார தாத்தா எனப்படும் சுப்பராமய்யர் கம்பீரமும் நேர்மையும் கோபமும் கலந்த ஆகிருதி. 1965 JUNE. அவர் தனக்கு வயிறு ஏதோ அசொவ்கரியபடுத்துகிறது என்று தன மகனை - மாலி சித்தப்பா - வரச்சொன்னார். எனக்கு என்னமோ சரியில்லை. வில் வண்டிக்கு சொல்லிவிடு. நாளை என்னை சென்னைக்கு அழைத்துப்போ என்றார். ஏற்பாடுகள் ஆயின. திடீரென்று இரவு சென்னை வேண்டாம் உடனே கடலூருக்கு ஆஸ்பிடலுக்கு அழைத்துப்போ என்று சொன்னார். சரி என்று அழைத்துசென்றனர். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில். அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய் படுத்திருப்பது என்பது காற்றாடாத ஆலமரம் போல. பெரிய தாத்தா தன் தம்பியின் ஆரோக்கியம் குறித்து  கவலை கொண்டார். ஆனால் பயப்படவில்லை. அந்த சமயத்தில் என் எம்மா என்னை வயிற்றில் சுமந்திருந்தார். பேறு காலம். நான் பிறந்தேன் என்ற செய்தி அவருக்கு கிடைத்து சந்தோஷப் பட்டாராம். நீண்ட எதிர் பார்ப்புக்குப் பின் பிறந்த ஆண் மகவு நான் என்பதால். அவரை பார்க்க வந்தவர்களை என்னை (குழந்தையாக இருந்த என்னை) பார்க்க சொல்லி அனுப்புவாராம். எனக்கு பெயரிடப்பட்ட நாலைந்து நாளில் அவர் ஒரு திடீர் நொடியில் ஆஸ்பத்திரியிலேயே இறந்துபோனார். அவர் தனக்கு என்னவோ உள் வலி ஒன்றை உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் தன் டைரியில் - நாகலக்ஷ்மிக்கு பிரசவ வேதனை எனக்கு மரண வேதனை என்று எழுதியிருந்தார் - அந்த டைரி இப்போது அவர் மகன் - மாலி சித்தப்பாவிடம் - இருக்கிறது. 

மூட்டு வலி

அவருக்கு ஒரு முறை மூட்டு வலி அதிகமாகவே டாக்டரிடம் போனார். அவர் இது பல் சம்மந்தமாக வருவது. பற்களை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னாராம். தாத்தாவுக்கு நல்ல பல் வரிசை. என்ன செய்வது என்று தெரியாமல் டாக்டர் சற்றே உள்ளோ போகும்போது சொல்லிக்கொள்ளாமல் எழுந்து வந்துவிட்டாராம். மொட்டை தலையக்கும் முழங்கலுக்கும் முடிச்சு தெரியும். முகவைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு இதுதானோ?

பிள்ளயார்

உளுந்தாண்டர்கோவில் வீட்டில் பூஜை மந்தாசனம் உண்டு. சின்ன கோயில் போன்ற அமைப்பு. அதில் ஒரு பிள்ளயார் உண்டு. அது வெள்ளை எருக்கு மரத்தின் கிழக்கு புறமாக (கிழக்க தெற்கா நினைவில்லை) செல்லும் வேரில் செய்த சிலை. அதற்கு நிதமும் அபிஷேகத்துடன் பூஜை உண்டு. அதற்கு தினமும் ஒரு மஞ்சள் தோய்த்த துணி ஒரு கட்டி பூஜிப்பார்/ ஒரு முறை எலி அந்த பிள்ளையாரை இழுத்துக்கொண்டு போய்விட்டது (எலி பிள்ளையாரை இழுக்கும் வாகனம் என்று தெரியும். ஆனால் இப்படியா? ). தாத்தா பிள்ளையாரை தேடோ தேடோ என்று தேடினால் அது சமையல் அறையில் கிடைத்ததாம். அப்போதோ அல்லது பிறகோ அதன் இடப்புறத்தில் ஒரு துளை விழுந்துவிட்டது. பிறகு அப்பா பிறகு நான் அதை பூஜை செய்துவந்தோம். துளை பெரிதாகவே  மூளியாக இருப்பதை பூஜிக்க வேண்டாம் என்று எடுத்து வைத்துவிட்டோம். 

Sunday, January 17, 2010

கல்யாணசுந்தரம் - கூட்டல்

கல்யாணசுந்தரம் - என் அப்பா - கணக்கர். அவர் மிக வேகமாக கூட்டுவார் (additions). லெட்ஜரில் 5 அல்லது 6  இலக்கத்தில் எண்கள் இருக்கும். அவர் மூன்றாவது இலக்கத்திலிருந்து கூட்ட ஆரம்பிப்பார்.  நாம் ஒன்றாவது இலக்கம் பிறகு பத்தாவது இலக்கம் பிறகு நூறாவது இலக்கம் என்று கூட்டுவோம். அவர் மூன்றாவது இலக்கத்திலிருந்தே ஆரம்பிப்பார். 

கல்யாணசுந்தரமய்யர்- Handyman

கல்யாணசுந்தரமய்யர் - என் அப்பா -ஒரு Handyman. பொறியியல் - இஞ்சினீரிங் மூளை என்று சொல்வார்கள். படிப்பு ஒன்பதாவம் வகுப்பு வரை. டைபாயடு காய்ச்சலில் படிப்பு நின்றது.

அவருடைய கைஎழுத்து மிகப் பிரசித்தம். மிக அழகாக எழுதுவார். ஒருமுறை உறவினர் பெரியவர் ஒருவர் அவருடைய கையெழுத்தைப் பார்த்துவிட்டு எழுதிய தாளை எடுத்து பவ்யமாக கண்களில் ஒற்றிக்கொண்டாராம். ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துருக்கள் மணியின் அழகை ஒத்தவை. பெரிய பெரிய பெயர்ப்பலகைகளும் எழுதுவதில் வல்லவர். பிரம்பு குச்சியை கூறாக சீவி அவற்றை இங்கில் நனைத்து எழுதுவது அவருடைய பாணி.

  1. சைக்கிள் ரிப்பேர் நன்றாக செய்வார்/ பஞ்சர் ஓட்டுவது முதல் பிரீவீல் கட்டுவது வரை.
  2. தச்சு வேலை செய்வார் - எல்லா உபகரணமும் வைத்திருப்பார்/ உளி முதல் கொட்டபுளி வரை.
  3. தோல் பொருள்கள் தைப்பார். செருப்பூசி முதல் ரோசனம் வரை வைத்திருப்பார்.
  4. எலெக்ட்ரிக் வேலை செய்வார். ஒயர் வகைகள் டேப் டெஸ்ட்டர் வைத்திருப்பார்.
  5. விறகு  பிளப்பதற்கான பலவகை உளி சம்மட்டி வைத்திருப்பார்.
  6. தோட்ட வேலைக்கான கடப்பாரை முதல் பில் செதுக்கி வரை வைத்திருப்பார்.
  7. எல்லா முதலுதவி மருந்தும் வைத்திருப்பார் - பஞ்சு முதல் டிங்ச்சர் வரை 
  8. பாத்திரத்தில் பெயர் பொறிப்பார். அதற்கான சிற்றுளி சிறு சுத்தி வைத்திருப்பார்.
  9. பெயிண்ட் வேலை அனைத்தும் செய்வார்.
  10. சிறு சிறு மோட்டார் ரிப்பேர் செய்வார்
  11. பலவித பேனா வகைகள் சேகரித்து வைத்திருப்பார்
  12. கொலுத்து வேலைகள் செய்வார். வீட்டு தரை/ சுவர் அவர் செய்ததே
  13.  இரும்பை நெகிழ்த்தும் சிறு வேலைகள் செய்வார்
  14. புக் பைண்டிங் செய்வார்
  15. வண்ணக் காகிதங்களை வெட்டி ஓட்டும் காலையில் தேர்ந்தவர்
  16. நூற்கும் தக்கிளி வேலை செய்வார்
  17. படங்கள் பிரேம் போடும் வேலை செய்வார். அதற்கான ஆணி சுத்தி உண்டு.
  18. பத்திரங்கள் அக்ரீமேண்டுகள் எழுதும் முறை தெரிந்தவர்
  19. முஸ்லீம்கள் சம்பிரதாயத்தில் நல்லவை கெட்டவற்றிற்கு கடிதம் எழுதும் வகை தெரிந்தவர்.
  20. ப்ளம்பிங் வேலைகள் தெரிந்தவர். பைப் ரெண்ச் மன்கி  ஸ்பேனர் வைத்திருப்பார்.
  21. பித்தளை பாத்திரங்கள் ஓட்டை அடைக்கும் பூச்சு வேலை செய்வார். அதற்கான காரீயம் வெள்ளீயம் வைத்திருப்பார்.
  22. அலுமின்ய மற்றும் தாமிர பாத்திரங்கள் ஒடுக்கு எடுக்கும் வேலை தெரிந்தவர்.
  23. குடை ரிப்பேர் செய்வார். குடை துணி தைப்பார். 
  24. மேசன் வேலை தெரியும். பலகை மட்டம், குண்டு வைத்திருப்பார். நீர் மட்டம் பார்பார்.
  25. ஷீட் மெட்டல் எனப்படும் தகர வேலைகள் செய்வார். தகரத்தில் புனல். முறம் செய்துவைப்பார்.
என் நினைவில் இருப்பவை இவை. 

அவருடைய 60  வயதிலும் அவர் கற்றுக்கொள்ள விரும்பியது - கடிகார ரிப்பேர் மற்றும் ரேடியோ ரிப்பேர்.

மார்கண்டேய தாத்தா


மார்கண்டேய தாத்தா - என் அப்பாவின் தாத்தா - குறைப்ரசவத்தில் பிறந்தவர். அவருடைய தாயார் ருக்மிணி அம்மா. ஏழாவதோ எட்டாவதோ மாதத்தில் அவருக்கு தீவிர வயிற்றுக்கடுப்பு டிசென்ட்றி ஏற்பட்டது. அப்போது அடிக்கடி ஏற்பட்ட உபாதையில் வயிற்றின் அழுத்தத்தில் திடீரென குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வாழை இலையில் விளக்கெண்ணை இட்டு மூடி - பஞ்சின் மூலம் நீரும் பாலும் ஊட்டி வளர்த்தனர்.

வீட்டு மாடி


8 அக்ராஹாரம் வீட்டு மாடி. அப்போதெல்லாம் ஊரின் நிலக்கிழார்கள் இருவர் தவிர இருந்த ஒரே மாடி வீடு இதுதான். மாடி வீட்டுப்பையன் என்று எனக்கு பெயர். அங்கிருந்து மேற்கே பார்த்தால் தொலைவில் விளக்குகள் எரிகிறதா என்று தெரியும். கரண்ட் போய்விட்டால் அணைந்துவிட்டாதா என்று பார்க்க மாடிதான். நெல் காயப்போட எங்கள் வீட்டு மாடிதான். வடகம் காயப்போட மாடிதான். வருடம் ஓரிருமுறை சித்தப்பாக்கள் சென்னையிலிருந்து ரயிலில் வந்து கிழக்கே ஏரிக்கரை வழியாக வருவார்கள். ஓரிரு மைல் தொலைவில் ரயில் சத்தம் கேட்டவுடனேயே நாங்கள் மாடியில் ஏறி அவர்கள் வருவதை கண்டுபிடிப்போம்.

8 அக்ராஹாரம்


எண் 8 அக்ராஹாரம்
 உளுந்தாண்டர்கோவில்

உளுந்தாண்டார்கோவில்



உளுந்தாண்டார்கோவில் எண் எட்டு அக்ராஹாரம் நம் வீடு. வீட்டு வாசலிலிருந்து பார்த்தால் கோவில் கோபுரம்.

Tuesday, January 12, 2010

தக்ஷினாமூர்த்தி சுவாமி


உளுந்தாண்டர் கோவில் - ஊர் மற்றும் கோவில் பெயர் அதுதான். கோவிலின் உட் பிரதட்சிணம் வரும்போது தக்ஷினாமூர்த்தி சுவாமி இருப்பார். பெரும்பாலும் இருட்டிலிருந்து பிரித்து அறியமுடியாத படியான குறைந்த வெளிச்சத்தில் இருப்பார் அவர். சிறுவர்களுக்கு தனியாக இரவில் வருவதென்பது சற்று பயமான விஷயம்தான். பெரும்பாலும் வௌவால்கள் நம்மை முந்திக்கொண்டு ஒரு ஓட்டம் ஓடும். பெரிய தாத்தா அவர் முன் உட்கார்ந்து அரை மணி நேரம் தியானம் செய்வாராம். பெரும்பாலும் என்னுடைய இரண்டாவது சகோதரி சத்யம் அக்கா உடன் இருப்பாளாம். இருட்டுக்கு பயந்து கொண்டு அவருடைய விரலை பிடித்தபடியே கோவில் சுற்றி வந்து அவர் அருகிலேயே உட்கார்ந்து கொள்வாளாம். தற்போது அத்வைத சித்தாந்தத்தில் ஊறிக்கொண்டிருக்கும் அவளுடைய ஞான வேட்கை தாத்தாவின் வழிகாட்டலில் அந்த ஞான குருவின் அருள் என்பதை அவள் பூரணமாக நம்புகிறாள். ஞான விதைகள் போட நேரம் காலம் வயது எதுவும் தேவையில்லை. தருணங்கள் போதும்.