Monday, January 25, 2010

ராமமூர்த்தி அய்யர் - தேள் கடி சிகிச்சை

ராமமூர்த்தி அய்யர் எனக்கு பெரியப்பா - என் அப்பாவுக்கு அண்ணன் உறவு - அவர் பள்ளிக்கூட வாத்தியார். முன்பு மணியக்காரராக இருந்தார். அதனால் அவரை மணியகார் பெரியப்பா என்போம். நல்ல உயரம். சிறிது நாள் தாடி வைத்திருந்தார். நிலபுலங்கள் உண்டு. நிறைய மாடுகள் உண்டு. வீட்டின் முன் ஒரு பண்ணை அளவுக்கு மாடுகள் இருக்கும். விவசாய மனம் உடையவர். அவர் வீட்டில் ஒரு கண்ணாடி பாட்டிலில் பொட்டசியம் பெர்மங்கனட் இருக்கும். இன்னொரு பாட்டிலில் சர்க்கரை இருக்கும். இதுதான் தேள் கடி மருந்து. ஊரில் யாருக்கு தேள் கொட்டினாலும் உடனே அங்கு ஓடி வருவார்கள். தேள் கடி பாட இடம் - கடி வாய் - லேசாக வேர்த்து இருக்குமாம். பெரும்பாலும் இவை இருட்டு வலையில்தான் நடக்கும் . "தேள்தானா பாத்தியா" என்று கேட்டுவிட்டு சிகிச்சை செய்வார். சிறு துளி கரு நிற பொட்டாசியம் பர்மந்கனட் வைத்து அதன் மேல் சிட்டிகை சர்க்கரை வைத்து ஒரு சொட்டு நீர் விட்டு சிறு துடைப்ப குச்சியால் லேசாக அந்த பொடிகளை நகர்த்துவார். கடிவாய் இடம் கண்டவுடன் அது சுறு சுறு சுறுவென பொங்கும். அப்போது கடிபட்டவர் அலறுவார். "அவ்ளோதான் சரியாய் போச்சு போ" என்று சொல்லி அனுப்பிவிடுவார். இந்த சிகிச்சையை வேடிக்கை பார்க்க எப்போதும் ஒரு சிறுவர் கூட்டம் இருக்கும். 

No comments: