Saturday, December 5, 2009

டைம் பீஸ்


சின்ன தாத்தா பள்ளிக்கூட ஆசிரியர்/ அவர் தினமும் கையில் அலாரம் கடிகாரத்தை எடுத்துக்கொண்டு தெருவை ஒரு சுற்று சுற்றி வந்து அனைத்து மாணவர்களையும் அழைத்துக்கொண்டு போவாராம். எப்போதும் அவருடன் அந்த டைம் பீஸ் இருக்குமாம்.

வாழைப்பூ

சின்ன தாத்தா நெற்றியில் ரக்ஷை போட்டு வைத்திருப்பாராம். வாழைப்பூ மடல்களை எடுத்து காயவைத்து அதை நெருப்பில் சுட்டு அந்த அக்னி விலகிய பூச்சாம்பலை நீருடன் கலந்து வைத்துக்கொள்வாராம். இதற்காக அக்ரஹாரத்தில் ப்ரோஹிதம் செய்யும் தண்டபாணி அய்யர் வீட்டார் பூ மடல்களை கொண்டுவந்து கொடுப்பார்களாம்.

Saturday, October 3, 2009

தமாஷ்

எங்கள் குடும்பத்தில் தாத்தாவின் தங்கை குடும்பத்தில் சங்கரன், ரகுபதி , சேது, நச்சு எனும் நரசிம்மன் ஆகியவர்கள் உண்டு. சாதாரணமாக பெரியவர்கள் களைப்படைந்து உட்காரும்போதோ எழும்போதோ கடவுள் பெயர் சொல்வதுண்டு. "முருகா ராமா கிருஷ்ணா " என்று. அப்படி பெரிய தாத்தா உச்ச்ச்ஸ்... - சங்கரா - என்பாராம். சின்ன தாத்தா - ரகுபதே - என்பாராம். அப்போது சிறுவனாக இருந்த மாலி சித்தப்பா மெல்லிய குரலில் - சேதுராமா - என்பாராம் தமாஷாக.

Saturday, April 18, 2009

அனுசரணை

சின்ன தாத்தா ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியர். அவருடைய கோபமும் அடியும் பிரசித்தம். இப்போதுகூட ௬00 வயது தாண்டிய பலர் அவ்வூரில் அவருடைய ஆரம்ப பள்ளி மாணவனாக இருந்திருப்பார்கள். கார்போறல் பனிஷ்மென்ட் எல்லாம் சகஜம். அதே சமயம் அனுசரணையும் உண்டு. மாணவனை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பெற்றோரை கண்டிப்பார். காலையில் கையில் பிரம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு ஊர் தெருவை ஒருமுறை சுற்றி வருவாராம். அந்த நிமிடம் வரை பள்ளிக்கு போகாது இருக்க நினைத்த பையன்கள் எல்லோரும் பள்ளிக்கு ஒடுவார்களாம். சிறுவனுக்கு சட்டை இல்லை அதனால் அனுப்பவில்லை என்று சொன்னால் தன்னுடைய சட்டை ஒன்றை கொடுத்து போட்டுக்கொண்டு ஓடுடா என்பாராம். அவன் உடல் முழுவதையும் சாட்டையால் மறைத்தபடி ஓடுவானாம். காலை சாப்பாடு இல்லை என்றால் அவனை தன் வீட்டுக்கு அனுப்பி - இவனுக்கு சாப்பாடு போட்டு அனுப்பவும் - என்று ஒரு சிட் எழுதி அனுப்பி அவனை சாப்பிடச்சொல்லி பின் பள்ளிக்கு அழைப்பாராம்.

Friday, April 17, 2009

அன்பளிப்பு


மீசைக்கார தாத்தா உறவினருடைய மகள் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. ஆனால் ஜானவாசம் (அல்லது கல்யாணத்தில் ஏதோ ஒரு முக்கிய அம்சமான விசேஷம்) புடவை வாங்க முடியவில்லை. அதனால் இருக்கிற நல்ல புடவையை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று இருப்பதாக சொன்னாராம். உடனே தாத்தா புது புடவை இல்லாமல் கல்யாண விசேஷமா என்று தான் எங்கேயோ பேசி தான் கடனாக புடவை வாங்கி அதை தந்து நடத்த சொன்னாராம். பிறகு தான் அண்ணனிடம் இப்படி கடன் வாங்கி தந்துவிட்டேன் என்று சொன்னாராம். பண வரத்து அவர்களிடம் இல்லாதபோதும் உதவி செய்தவர்கள் அவர்கள்.

இப்போதும் யாருடைய கல்யானதிர்காவது சென்று அன்பளிப்பு அளிக்கும்போது எனக்கு தாத்தாக்கள் நினைவுக்கு வருகிறார்கள். நான் அளிக்கும் அன்பளிப்பு எதுவாயினும் அது எனக்கு மிக சொற்பமானதாக எனக்கு தோன்றுகிறது.

சப்தமின்றி உதவி


ஒருமுறை அப்பா கடைவீதியில் நடந்து வந்துகொண்டிருந்த போது எதிரே உறவினர் பையன் ஒருவனைப் பார்த்தார் . என்னடா பள்ளிக்கூடம் போகவில்லையா என்று கேட்டார். பள்ளி இறுதி வகுப்பாயிற்றே . பரீட்சைக்கு பணம் கட்ட முடியவில்லை. அடுத்த வருடம் எழுதலாம் என்று அப்பா சொல்லிவிட்டார் என்றாரம். படிக்கற பய்யன் ஒரு வருஷம் வீணா போகுமேடா எனச்சொல்லி நான் பணம் தருகிறேன் போய் பீஸ் கட்டிவிட்டு பள்ளிக்கூடம் போ என்றாராம். அப்பா திட்டுவார் என்று பய்யன் சொல்ல நான் அவரிடம் சொல்லிக்கொள்கிறேன் நான் இந்த பணத்தை பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று சமாதானம் சொல்லி அந்த பய்யனுக்கு பணம் கட்டினாராம் அப்பா. அதை யாரிடமும் அவர் சொன்னதில்லை

Saturday, April 4, 2009

மீசக்கார தாத்தா

சின்ன தாத்தா ஒரு ஹீரோ. அந்த காலத்தில் அக்ரகாரம் வழியே சிலர் செருப்பு அணிந்து செல்ல மாட்டார்கள். அந்த காலத்து ஜாதீய பிடிப்புகள் இருந்தது. ஆனால் மனித நேயம் உள்ளவராம் தாத்தா. வீடு தீப்பிடித்து எரிகிறது என்றால் சைக்கிளை கொடுத்து தீயணைப்புக்கு அனுப்பிவிட்டு தான் ஓடி நின்று எல்லோருடனும் சேர்ந்து தண்ணீரை விசிறி தீயை அணைத்துக் கொண்டிருப்பாராம். யாருக்காவது கஷ்டம் என்றால் உடனடியாக உதவுவாராம். அவரிடம் கண்டிப்பும் கருணையும் இருந்தது. நான் அவரை பார்த்ததில்லை.

நான் என் பள்ளிப்பருவத்தில் இருந்தபோது ஒருமுறை கிழக்கு தெருவில் வீடு தீப்பற்றிக்கொண்ட போது நான் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தண்ணீரை விசிறி உதவிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் (அவர் பெயர் நினைவில் இல்லை. கூத்து நடக்கும்போது வெங்கடாஜலபதி வேஷம் போடுவார் அவர்) "உங்க மீசக்கார தாத்தா இப்பிடிதான் வருவாரு அவசரம்னா " என்றார். அவர் மூலம்தான் தாத்தாவின் சில விஷயம் எனக்கு தெரியும்.

பள்ளிக்கூடம்


மார்கண்டேயன் தாத்தா வெள்ளூர் என்ற ஊரில் இருந்தார். நல்லன்குப்பம் அருகே என்று நினைக்கிறேன். அது நெய்வேலி அருகே இருந்தது. சுரங்க வேலை ஆரம்பித்து நிலக்கரி சுரங்கங்கள் விரிந்தபோது அந்த கிராமம் இல்லாமல் போய்விட்டது. அங்கிருந்து உளுந்தாண்டர் கோவிலுக்கு முதலில் சின்ன தாத்தாதான் வந்தாராம். அப்போது ஒரு வீட்டில்தான் பள்ளிக்கூடம். பிறகு சுப்ரமண்ணிய நயினார் நிலத்தை தர அரசு அதிகாரிகளிடம் பேசி பள்ளிக்கூடம் கட்ட முனைந்தார் தாத்தா. அது மிக நீளமாக இருக்கும். குதிரை லாயம் போல. நானும் அதில் படித்திருக்கிறேன். அது இடிந்தபோது கொஞ்சநாட்கள் கோவிலில் பள்ளிக்கூடம் நடந்தது. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்தேன் கோவில் பள்ளியில். தாத்தா தொடங்கி வைத்த பள்ளிதான் இப்போது அங்கே இருப்பது. வடிவம்தான் மாறியிருக்கிறது.

அப்பாவின் சைக்கிள்

அப்பாவின் சைக்கிள் மறக்க முடியாதது. அதில் சீட்டுக்கு மேல் பிளாஸ்டிக் காகிதம் போட்டு கட்டியிருப்பார். மழையில் தோல் சீட் நனையக்கூடாது என்பதற்காக. பிடல் மரக்கட்டையில் இருக்கும். அகலமாகவும் மழையில் நனைந்து துருப்பிடிக்காது என்பதற்காகவும். செயின் கவர் இருக்காது. போடவும் விடமாட்டார். நான் பேன்ட்ஸ் போட்டபின் கரயகிவிடும் என்றால் வலது கால் பக்கம் மடித்திவித்டுக்கொண்டு ஒட்டு என்பார். நான் சங்கோஜம் காரணமாக அப்பிடி செய்யாமல் ரப்பர் பேண்டை போட்டு கட்டிக்கொண்டு ஓட்டுவேன். அப்பா பெர்பெக்ட் ஹேண்டிமன். அவர் செய்யாத வேலையே கிடையாது. (பிறகு ஒரு இடத்தில் அதை எழுதுவேன்). அதன் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு தினுசு. பல சைக்கிள் பாகங்களின் சேர்க்கையாக இருக்கும். பின் காரீர் வெகு நாள் வரை காரீர் கிளிப் இல்லாமலே இருந்தது. ஒருமுறை கடலூர் சென்று பயன்படுத்தாமல் வீசி எறியப்பட்ட காரீரை கொண்டுவந்து நகாசு வேலைகள் செய்து மாட்டிவிட்டார். புது காரீர் வரும் என்ற என் கனவில் மண்.

அச்சி பாட்டிக்கு மூன்று சகோதரர்கள். ஒருவர் புரொபசர். அவர் இளமையிலேயே இறந்துவிட்டார். அவருடைய சைக்கிளை பாவா - அதாவது பெரிய தாத்தாவுக்கு உபயோகிக்க கொடுத்தனர். அதை சின்ன தாத்தா அனுசெட்டிபலயத்தில் இருந்து தொட்டகுப்பம் செல்ல உபயோகித்து வந்தார். பிறகு உளுந்தாண்டார்கோயில் வந்தபோது பெரியதாத்தா ஆதனூர் சென்று வர உபயோகித்தார். பிறகு செம்மனன்கூர் புதூர் போக வர உபயோகித்தார். சின்ன தாத்தா வேட்டவலம் சென்றுவர உபயோகித்தார். அவர்களுக்கு பிறகு அப்பா உபயோகித்தார். பிறகு நானும் அதை உபயோகித்து வந்தேன் அப்பா இருக்கும்வரை. ஆனால் நான் நிறைய மாற்றிவிட்டேன் அந்த சைக்கிளை. சைக்கிளை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து பழுது பார்த்து பின்பு பூட்டிவிடுவேன். அப்பாவிடம் கற்றது. சிறு சிறு பகுதிகளாக மாற்றி மாற்றியபோதும் எப்போதும் அதில் ஒரு பழைய பகுதி இருந்துகொண்டே இருக்கும். கெரோசின் விளக்கு ஒன்று உண்டு. அதை ஹண்டில்பாரின் முன் மாட்டிவிடுவர் இரவில். பிறகு வெகு நாள் கழித்து சேலம் விஸ்வம் பாவா கொடுத்த டைனமோவை நான் இம்சித்து மாட்டிவிட்டேன். ஆனால் அப்பா சைக்கிள் டயருக்கு ஆயுள் குறைவு என்று உபயோகிக்க மாட்டார். சைக்கிள் பெல்லைவிட செயினின் க்ரீச் க்ரீச் சத்தம் வைத்தே அப்பா வருகிறார் என்று சொல்லிவிடுவோம். சைக்கிள் அப்பாவின் குழந்தை. அப்பா உடல் நலம் குன்றியபோது நீண்ட நாட்களாக அந்த சைக்கிள் அப்படியே இருந்தது. அப்பா இனி சைக்கிள் ஓட்ட மாட்டார் என்ற நிலை தெரிந்தபோது தெரிந்த ஒருவருக்கு அதை விற்றாயிற்று. இப்போது இருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் கிடைத்தால் என்ன விலை கொடுத்தாவது வாங்கிவிடுவேன் அக்குழந்தையை.

அச்சி பாட்டி


என் அப்பாவின் அம்மா எனக்கு அச்சிபாட்டி. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். பையன் நல்லவன். நல்ல குடும்பம் என்று தாத்தாவுக்கு மணம் முடித்தனர். பாட்டியின் அண்ணா அந்த காலத்திலேயே ஒரு வக்கீல். குதிரையெல்லாம் வைத்திருந்தாராம். வக்கீல் மாமா கஸ்துரி மாமா என்று அப்பா சொல்லுவார். ஒரு போது பாட்டி கடலூரில் இருந்தார். தெற்கு கவரை வீதி. அந்த வீட்டை பார்க்கவேண்டும் என்று சென்றேன். அதிர்ஷ்டவசமாக அந்த வீடு இன்னும் அப்படியே இருக்கிறது. சில சிதிலங்கள். வீடு மிக பெரியது. வாசல் இந்த தெருவில் தொடங்கி தோட்டவாசல் அடுத்த தெருவரை நீள்கிறது. அப்போது பாட்டிக்கு வசதியாக இருக்கவேண்டும் என்று அவருடைய அண்ணா சமையல் அறையில் சமையல் மேடை ஒன்று அமைத்தனராம். பாட்டியின் மேல் மிகுந்த ப்ரியம் உண்டாம். அந்த மேடையை இப்போது பார்க்கும்போது பாட்டியின் உயரம் ஊகிக்கமுடிகிறது. குள்ளம்தான்.


பாட்டியின் தனி முழு போட்டோ இல்லை. எப்போதோ எடுத்த குரூப் போட்டோவில் இருந்து பாட்டியின் முகத்தை எடுத்துபின் வேறு ஒரு போட்டோவின் உடலோடு இணைத்து உட்கார்ந்து இருப்பதுபோல ஒரு போட்டோ செய்தார் என் சித்தப்பா/ துரை சித்தப்பா. ஆனால் பாட்டி அபிதம் அத்தையை வைதுள்ளபடி ஒரு போட்டோ உண்டு. அப்பா அதை பிரேம் செய்தார். ஆனால் அதில் அத்தையின் படமும் இருப்பதால் பூ வைக்க கூடாது என்று அதை அப்பா தனியாக வைத்திருந்தார்.

Friday, April 3, 2009

அங்குசெட்டிபாளையம்


என் தாத்தாக்கள் பெரிய தாத்தா சின்ன தாத்தா இருவரும் தங்களுடைய நாட்களில் - ௧௯௨0-௨௫ அங்குசெட்டிபாளையம் என்ற ஊரில் ஒரு சத்திரத்தில் தங்கி அங்கிருந்து கொஞ்சம் காலம் ஆசிரியர்களாக வேலை செய்தனர். அய்யர் வீட்டுப் பிள்ளைகள் என்பதால் சத்திரத்திலேயே தங்கியிருக்க ஊர் பெரியவர்கள் அனுமதி தந்திருந்தனர். சின்ன தாத்தா அங்கிருந்து தோட்டப்பட்டு என்ற ஊருக்கு சென்று பணிபுரிந்தார். பலரும் வந்து போகும் சத்திரத்தில்தான் அவர்கள் சொற்ப காலம் தங்கியிருந்தனர் என்று கேள்விபட்டிருக்கிறேன். சமீபமாக கடலூர் போகும்போது அங்கே இறங்கி அந்த ஊரில் விசாரித்தபோது அந்த சத்திரம் இப்போது இல்லை என தெரிந்தது. முதியவர்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். ஒரு வகையில் அவர்கள் இருந்தது சிறிய சத்திரம் என்றால் நாமெல்லாம் இருப்பது உலகம் என்ற பெரிய சத்திரத்தில். அங்கிருந்துதான் ஆசிரியர்களாக பணிபுரிந்தார்கள். இப்போது அந்த ஊரின் பெயர் பழகிய போட்டோ எடுத்த போது அதன் கம்பங்களில் கற்போம் கற்பிப்போம் என்று வாசகம் இருந்தது. அது யதேச்சையாக இருந்தாலும் எனக்கு என் தாத்தா சொல்வதுபோல் இருந்தது!

Saturday, February 7, 2009

தக்ஷிணாமூர்த்தி

பெரிய தாத்தா டகு டகு டிகு டிகு என்று கந்த சஷ்டிகவசம் சொல்லிக்கொண்டே சந்தனம் அரைப்பது தினசரி காட்சி என்று அம்மா சொல்லுவார்,
அதேபோல் தாத்தா தட்சிணாமுர்த்தியை சுலோகம் சொல்லி தப்பாது வணங்குவராராம்,ஞானவழிக்கு தட்சிணாமுர்த்தி என்று சொல்வார்கள், அதுவே அவரை நன்கு செதுக்கியிருக்கிறது எனலாம், அவர் மிக சராசரியான மனிதர்போல தோன்றினாலும் பேசினாலும் அவருக்குள் ஒரு மேதமை பொருந்திய அனுக்கம் இருந்திருக்கிறது, கோவிலின் கர்பகிருகத்துள் அசையாது எரியும் தீபமும் அதைச்சுற்றி அந்த சிறியஇடத்தில் நிலவும் கதகதப்பையும் போல, பெரும்பான்மையான அவருடைய தட்சிணாமுர்த்தி வழிபாட்டின்போது அவரது விரலைப்பிடித்துக்கொண்டு கூடவே ஒரு சிறுமி நின்றிருக்கிறhள், அவள் இப்போதும் அதன் வியாபகத்தில் இருக்கிறhள் என்பது என் எண்ணம், அவளுக்கு அந்த விரல்தான் இப்போது இல்லை, ஆனால் அந்த பிடி அப்படியே இருக்கிறது,,

விளக்கு


2009 சிவராத்திரி நெருங்குகிறது, இத்தருணத்தில் எல்லா முன்னோர்களையும் மானசீகமாக வேண்டிக்கொள்ள வேண்டும், மிக சாதாராண சராசரியான வாழ்க்கைமுறையில் மேலோங்கிய ஆன்மீக உந்துதலுடனும் அர்ப்பணிப்போடும் அவர்கள் செய்ததன் பயனும் பலனுமே இன்றைய பெனுபர்த்தி,
ஒருமுறை குருக்கள் கோவிலில் விளக்குக்கு எண்ணெய் இல்லை என்று சாவதானமாக சொன்னாராம், அதிலிருந்து நீண்ட நாட்களுக்கு பெரிய தாத்தா தினமும் சென்று ஒரு விளக்கு வைத்துவிட்டு சிவதரிசனம் செய்துவிட்டு வருவாராம், ஏன் வைக்கிறhர் என்று யாருக்கும் தெரியாது, அவரும் சொன்னதில்லையாம் வெகுநாள்வரை,
இருட்டு என்று சொல்லாதே, ஒரு விளக்கை ஏற்றி வை என்று ஒரு சீனப்பழமொழி உண்டு, சில தத்துவங்கள் தத்துவம் என்று தெரியாமலேயே அதை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள் சிலர் உண்டு, தாத்தாவும் அதில் ஒருவர்,