Saturday, April 4, 2009

அப்பாவின் சைக்கிள்

அப்பாவின் சைக்கிள் மறக்க முடியாதது. அதில் சீட்டுக்கு மேல் பிளாஸ்டிக் காகிதம் போட்டு கட்டியிருப்பார். மழையில் தோல் சீட் நனையக்கூடாது என்பதற்காக. பிடல் மரக்கட்டையில் இருக்கும். அகலமாகவும் மழையில் நனைந்து துருப்பிடிக்காது என்பதற்காகவும். செயின் கவர் இருக்காது. போடவும் விடமாட்டார். நான் பேன்ட்ஸ் போட்டபின் கரயகிவிடும் என்றால் வலது கால் பக்கம் மடித்திவித்டுக்கொண்டு ஒட்டு என்பார். நான் சங்கோஜம் காரணமாக அப்பிடி செய்யாமல் ரப்பர் பேண்டை போட்டு கட்டிக்கொண்டு ஓட்டுவேன். அப்பா பெர்பெக்ட் ஹேண்டிமன். அவர் செய்யாத வேலையே கிடையாது. (பிறகு ஒரு இடத்தில் அதை எழுதுவேன்). அதன் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு தினுசு. பல சைக்கிள் பாகங்களின் சேர்க்கையாக இருக்கும். பின் காரீர் வெகு நாள் வரை காரீர் கிளிப் இல்லாமலே இருந்தது. ஒருமுறை கடலூர் சென்று பயன்படுத்தாமல் வீசி எறியப்பட்ட காரீரை கொண்டுவந்து நகாசு வேலைகள் செய்து மாட்டிவிட்டார். புது காரீர் வரும் என்ற என் கனவில் மண்.

அச்சி பாட்டிக்கு மூன்று சகோதரர்கள். ஒருவர் புரொபசர். அவர் இளமையிலேயே இறந்துவிட்டார். அவருடைய சைக்கிளை பாவா - அதாவது பெரிய தாத்தாவுக்கு உபயோகிக்க கொடுத்தனர். அதை சின்ன தாத்தா அனுசெட்டிபலயத்தில் இருந்து தொட்டகுப்பம் செல்ல உபயோகித்து வந்தார். பிறகு உளுந்தாண்டார்கோயில் வந்தபோது பெரியதாத்தா ஆதனூர் சென்று வர உபயோகித்தார். பிறகு செம்மனன்கூர் புதூர் போக வர உபயோகித்தார். சின்ன தாத்தா வேட்டவலம் சென்றுவர உபயோகித்தார். அவர்களுக்கு பிறகு அப்பா உபயோகித்தார். பிறகு நானும் அதை உபயோகித்து வந்தேன் அப்பா இருக்கும்வரை. ஆனால் நான் நிறைய மாற்றிவிட்டேன் அந்த சைக்கிளை. சைக்கிளை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து பழுது பார்த்து பின்பு பூட்டிவிடுவேன். அப்பாவிடம் கற்றது. சிறு சிறு பகுதிகளாக மாற்றி மாற்றியபோதும் எப்போதும் அதில் ஒரு பழைய பகுதி இருந்துகொண்டே இருக்கும். கெரோசின் விளக்கு ஒன்று உண்டு. அதை ஹண்டில்பாரின் முன் மாட்டிவிடுவர் இரவில். பிறகு வெகு நாள் கழித்து சேலம் விஸ்வம் பாவா கொடுத்த டைனமோவை நான் இம்சித்து மாட்டிவிட்டேன். ஆனால் அப்பா சைக்கிள் டயருக்கு ஆயுள் குறைவு என்று உபயோகிக்க மாட்டார். சைக்கிள் பெல்லைவிட செயினின் க்ரீச் க்ரீச் சத்தம் வைத்தே அப்பா வருகிறார் என்று சொல்லிவிடுவோம். சைக்கிள் அப்பாவின் குழந்தை. அப்பா உடல் நலம் குன்றியபோது நீண்ட நாட்களாக அந்த சைக்கிள் அப்படியே இருந்தது. அப்பா இனி சைக்கிள் ஓட்ட மாட்டார் என்ற நிலை தெரிந்தபோது தெரிந்த ஒருவருக்கு அதை விற்றாயிற்று. இப்போது இருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் கிடைத்தால் என்ன விலை கொடுத்தாவது வாங்கிவிடுவேன் அக்குழந்தையை.

No comments: