Saturday, April 4, 2009

அச்சி பாட்டி


என் அப்பாவின் அம்மா எனக்கு அச்சிபாட்டி. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். பையன் நல்லவன். நல்ல குடும்பம் என்று தாத்தாவுக்கு மணம் முடித்தனர். பாட்டியின் அண்ணா அந்த காலத்திலேயே ஒரு வக்கீல். குதிரையெல்லாம் வைத்திருந்தாராம். வக்கீல் மாமா கஸ்துரி மாமா என்று அப்பா சொல்லுவார். ஒரு போது பாட்டி கடலூரில் இருந்தார். தெற்கு கவரை வீதி. அந்த வீட்டை பார்க்கவேண்டும் என்று சென்றேன். அதிர்ஷ்டவசமாக அந்த வீடு இன்னும் அப்படியே இருக்கிறது. சில சிதிலங்கள். வீடு மிக பெரியது. வாசல் இந்த தெருவில் தொடங்கி தோட்டவாசல் அடுத்த தெருவரை நீள்கிறது. அப்போது பாட்டிக்கு வசதியாக இருக்கவேண்டும் என்று அவருடைய அண்ணா சமையல் அறையில் சமையல் மேடை ஒன்று அமைத்தனராம். பாட்டியின் மேல் மிகுந்த ப்ரியம் உண்டாம். அந்த மேடையை இப்போது பார்க்கும்போது பாட்டியின் உயரம் ஊகிக்கமுடிகிறது. குள்ளம்தான்.


பாட்டியின் தனி முழு போட்டோ இல்லை. எப்போதோ எடுத்த குரூப் போட்டோவில் இருந்து பாட்டியின் முகத்தை எடுத்துபின் வேறு ஒரு போட்டோவின் உடலோடு இணைத்து உட்கார்ந்து இருப்பதுபோல ஒரு போட்டோ செய்தார் என் சித்தப்பா/ துரை சித்தப்பா. ஆனால் பாட்டி அபிதம் அத்தையை வைதுள்ளபடி ஒரு போட்டோ உண்டு. அப்பா அதை பிரேம் செய்தார். ஆனால் அதில் அத்தையின் படமும் இருப்பதால் பூ வைக்க கூடாது என்று அதை அப்பா தனியாக வைத்திருந்தார்.

No comments: