Wednesday, August 14, 2013

பத்திரம் எழுதுதல்

தற்போது drafting என்பது ஒரு கலையாக கற்பிக்கப் படுகிறது. ஆனால் அந்த காலத்தில் அது மிக சாதாரணமான விஷயம். ஒவ்வொன்றுக்கும் ஒரு எழுதுமுறை உண்டு . அதில் மிக சிக்கலானதும் சட்டரீதியான விஷயம் உடையதும் - பத்திரம் எழுதுதல். வீடு அடமானம் கொடுக்கல் வாங்கல் போக்கியம் வைத்தல் கடன் பத்திரங்கள் என்று பல வகை. பாண்டுபத்திரம்  என்று அழைக்கப்பட்டு ப்ரோநோட் வாங்கி அதில் எழுதப்படும்.  இதற்கு சம்மந்தப் பட்டவர்கள் இரு குழுவாக வந்து பத்திரம் எழுத சொல்லுவார்கள். எல்லா விவரமும் சேகரித்து - விஷயத்திற்கு தக்க முறையில் எழுதுவார்கள். ஊரிலியே இதை எழுத தெரிந்தவர்கள் ராமமூர்த்தி பெரியப்பாவும் என் அப்பாவும் தான். இதில் பல நெளிவு சுளிவுகள் உண்டு. அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவது. இரு வரிகளுக்கான இடைவெளியில் வேறேதும் எழுத முடியாத படி நெருக்கியும் ஆனால் வரிகள் overlap ஆகாமலும் இருக்கவேண்டும். பக்கத்தின் கடைசி விளிம்பு வரை எழுதி வார்த்தைகளை ஒடித்து எழுத வேண்டும். ஏதாவது சிறு திருத்தம் நேர்ந்தால் அடித்து எழுதி ஒரு இனிஷியல் போடுவார்கள். அந்த திருத்தம் பற்றி அடிக்குறிப்பு எழுதுவார்கள். இறுதியில் சம்மந்தப் பட்டவர்களின் கையெழுத்து அல்லது ரேகை பதிவு செய்து - இவர்கள் நெட்டெழுத்து போடுவார்கள். இது எந்த நீதி மன்றம் போனாலும் செல்லத் தக்கதாய் இருக்கும்.




No comments: